ஓய்ந்த அலை
மதுரையில் தொடங்கிய வாழ்க்கை!
மேதினியில் ஓய்ந்த அலை!
பென்னர் நிறுவனத்தில் சந்தித்தோம் நாள்தோறும்
ஒன்றாக நட்பில் திளைத்திருந்தோம் வாழ்க்கையில்
இப்படித் தான்பிரிந்து வாழ்வோம் எனக்கனவு
கண்டதில்லை! காலமாற்றம் பார்.
கூடிப் பணிக்களத்தில் சேர்ந்திருந்த நேரத்தில்
ஆடிக் களித்திருந்தோம் பாடிப் பறந்திருந்தோம்!
ஊடினோம்! என்னென்ன கூட்டங்கள் சிந்தனைகள்!
சாடினோம் ஓடினோம் தூண்டில் இரையானோம்!
மேதினியே நம்வசந்தான் என்றே களித்திருந்தோம்!
ஏதினி இங்கே கவலையென்று மெய்மறந்தோம்!
சாதித்தோம் என்றோம் நிமிர்ந்து.
இல்லறத்தை ஏற்றிருந்தோம்! இன்பங்கள் துன்பங்கள்
வந்தபோது சந்தித்தோம் அந்த இளம்பருவம்
சென்று முதுமை வருட பணிஓய்வில்
சென்றோம் திசைக்கொன்றாய் தான்.
பலவகை நோய்கள் பலவாறாய்த் தாக்க
கணவன் மனைவி படுத்த படுக்கை!
முணங்கித் தவித்தோம்! புரியாத வாழ்வை
இணங்கித்தான் ஏற்றோம் இணைந்து.
மதுரை நகரில் தொடங்கிய வாழ்க்கை
சிதறிச் சிதறி திசைதோறும் சென்றோம்!
நடைமுறை வாழ்க்கையோ வேறாக இன்று
கடக்கின்ற வாழ்க்கையோ வேறாக வாழும்
நிலையை உணர்கின்றோம் இங்கு.
கூடிப் பொழிந்திருந்த மேகங்க ளாயிருந்தோம்!
கூடிக் கலைகின்ற காகங்க ளாகிவிட்டோம்!
தேடி அலைய முடியவில்லை! தேங்கிவிட்டோம்!
ஓடிய நாட்களை எண்ணியே ஏங்குகிறோம்!
மேதினியில் ஓய்ந்த அலை.
மதுரை பாபாராஜ்
Baba...
verses that impacted my thoughts ! Let us keep going & overcome unanticipated battles in life...which is yet to come !
கூடிப் பொழிந்திருந்த மேகங்க ளாயிருந்தோம்!
கூடிக் கலைகின்ற காகங்க ளாகிவிட்டோம்!
தேடி அலைய முடியவில்லை! தேங்கிவிட்டோம்!
ஓடிய நாட்களை எண்ணியே ஏங்குகிறோம்!
மேதினியில் ஓய்ந்த அலை.
Raju,Fenner
Bangalore
மதுரை பாபாராஜ்
அன்புள்ள பாபா நாம் அந்த வயதில் உள்ளோம். ஓடிய நாட்களின் மகிழ்வை எண்ணி மீதம் உள்ள நாட்களை கடக்க எண்ணி கொண்டு உள்ளோம். நம் இப்போது வேண்டுவது நோயற்ற வாழ்வு மட்டுமே.
இதையும் மகிழ்வுடன் களிக்க இறைவனை வேண்டி கொள்வோம்.🙏🙏
ரமணி,பென்னர்
மலரும் நினைவுகள் மனதில் மலர்களை மணக்கவைக்கும்
ஜெயராமன்,பென்னர்
உங்கள் அலை யென்றும் ஓயாது. தொலைபேசி இணைக்கும்.
நாகு, பென்னர்
0 Comments:
Post a Comment
<< Home