Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாதி 56-60

 56.நகைத்ததை எண்ணித் தலைகுனிய வேண்டாம்!

  சிறைப்படுத்தும் உந்தன் அறியாமை போக்கி

  முறையாய் அறிவாற்றல் தன்னை வளர்த்துக்

  குறைநீக்கி நிற்பாய் நிமிர்ந்து.


57.நிமிர முடியாமல் தத்தளிக்கும் ஏழை

  நிமிர்வதற்கு வாய்ப்புகளைத் தந்தாக வேண்டும்!

  நிமிரத் துடிப்பவர்கள் வாய்ப்பினை ஏற்றே

  நிமிர்ந்தேதான் வாழ்தல் சிறப்பு.


58.சிறப்பான பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்!

  சிறந்தவர் என்றே பெயரெடுக்க வேண்டும்!

  இறந்த பிறகும் புகழ்நிலைக்க வேண்டும்!

  பிறவிப் பயனிது தான்.


59.தானென்னும் ஆணவத்தைத் தத்தெடுக்கும் உள்ளத்தில்

  ஈனத் தனங்களே கொண்டாட்டம் போட்டிருக்கும்!

  மானத்தைத் தள்ளி அவமானந் தன்னையே

  மானமென்று கூறும் சிரித்து.


60.சிரித்து நடிப்பார்! நடித்துச் சிரிப்பார்!

  சிரித்து நடித்தால் திறமை! நடித்துச் 

  சிரித்தால் கயமை! இதயங் குளிர

  சிரிக்கும் சிரிப்பொன்றே மெய்


0 Comments:

Post a Comment

<< Home