வாழ்வியல் அந்தாதி 61-70
61.மெய்ஞ்ஞானப் பார்வையோ ஆன்மிக எண்ணங்கள்!
விஞ்ஞானப் பார்வை அறிவியல் சிந்தனை!
விஞ்ஞானம் இங்கே நிரூபித்துக் காட்டுவது!
மெய்ஞ்ஞானம் நம்புவது தான்.
62.தான்செய்யும் தப்புகளை மூடி மறைப்பதும்
தேனகமே! மற்றவர்கள் என்றால் நகைப்பதும்
கோணல் மனங்கொண்ட வக்கிரப் புத்தியாகும்!
ஈனமனச் சிந்தனைகள் ஏன்?
63.ஏனம்மா என்றேன்! அருகில் நெருங்கிவந்தாள்!
மான்விழியே! உன்பெயரைச் சொல்லேன்? எனக்கேட்டேன்!
நான்தான் உந்தன் கவியரசி என்றதும்
நான்பறந்தேன் வானில் மிதந்து.
64.மிதந்துவரும் மேகங்கள் நீரை முகந்துக்
கடந்துசெல்லும் நேரம் கருமேக மாகிச்
சடசட வென்றேதான் பாரபட்சம் இன்றி
அகங்குளிர நாட்டில் மழைபெய்யும் தொண்டால்
நடக்கிறதே இவ்வுலக வாழ்வு.
65.வாழ்வின் உயிராம் மழைநீரைத் தேக்காமல்
நீர்நிலைக் குள்ளேயே வீடுகளைக் கட்டிவிட்டோம்!
நீர்தேங்கத் தத்தளித்தே ஊருக்குள் வீட்டுக்குள்
பாய்ந்துவந்து சீரழிக்கும் கோலத்தை உண்டாக்கி
பாழ்பட்டு நிற்கின்றோம் பார்.
66.பார்த்தனர்! கண்கள் கலந்தன! பார்த்தவள்
பார்த்தவனின் பார்வையைச் சற்றே தவிர்த்திட
ஊர்ந்துவந்த நாணத்தின் தேரை நகர்த்தினாள்!
காகுத்தன், சீதை நிலை.
67.நிலைகளை முன்னேற்ற நேர்வழியே நன்று!
அலைபாய விட்டுக் குறுக்குவழி சென்றால்
நிலைகுலையும்! வாழ்க்கையின் நிம்மதி போகும்!
விழலுக் கிறைத்திட்ட நீர்.
68.நீரெது? பாலெது? கண்மணியே! அன்னம்போல்
நீரை ஒதுக்கவேண்டும்! பாலை அருந்தவேண்டும்!
நீரென்றால் வேற்றுமையாம்! பாலென்றால் ஒற்றுமையாம்!
பாலருந்தி வாழ்தல் உயர்வு.
69.உயர்வு மனப்பான்மை கர்வம் கொடுக்கும்!
உலகிலே தாழ்வு மனப்பான்மை வாழ்வில்
கலங்கவைக்கும் கோழைத் தனத்தை வளர்க்கும்!
உயர்வை உயர்த்தும் பணிவு.
70. பணிவும் அடக்கமும் பக்குவத்தின் வேர்கள்!
கனிவு, கருணை இரக்கத்தின் தூண்கள்!
துணிவும் உழைப்பும் உயர்வின் படிகள்!
அனைத்துமே வாழ்வின் உயிர்.

0 Comments:
Post a Comment
<< Home