வாழ்வியல் அந்தாதி 71-80
71.உயிரும் உடலும் இணைந்தியங்கும் போது
புவியும் வணங்கும்! உறவும் மதிக்கும்!
உயிர்பிரிந்த பின்பு சடலமென்று கூறி
எரிப்பதற்கே முந்துவார் இங்கு.
72.இங்கேயும் அங்கேயும் பார்க்கும் பொருளையெல்லாம்
தங்கு தடையின்றி வாங்கிக் குவிக்கின்றார்!
தங்கிவாழும் வீட்டில் நடக்க இடமில்லை!
கண்மணியே! தேவையெனில் வாங்கு.
73. வாங்குகின்ற சக்தி இருக்கின்ற காரணத்தால்
வாங்கத் துடிப்பது நல்லதல்ல! வாங்குவதை
வாங்கும்முன் தேவை அறிந்தேதான் வாங்கவேண்டும்!
வாங்கியபின் சோகம் தவிர்.
74. தவிர்ப்போம் சினத்தை, பகையை, பொய்யை,
பழிவாங்கும் எண்ணத்தை, வன்முறையை, நம்மை
அழிக்கும் குடிவெறியை என்றே துணிந்தால்
புவியில் உயரும் புகழ்.
75. புகழ்ந்தாலும் நம்மை இகழ்ந்தாலும் நாமோ
அகங்குளிர ஏற்கும் மனநிலை பெற்றால்
அடலேறாய் யாருக்கும் அஞ்சாமல் நாளும்
கடமையைச் செய்வோம் துணிந்து.
76.துணிந்தால் மலையும் மடுவாகும்! நாளும்
குனிந்து குனிந்தேதான் குட்டுகள் பெற்றால்
பணிவல்ல கோழைத் தனமென்பேன்! என்றும்
துணிவில் விவேகத்தைச் சேர்.
77.சேர்ந்துவாழ்ந்தால் கோழையும் ஆற்றலுடன் வீரனாவான்!
சேராமல் வாழ்ந்திருந்தால் வீரனும் கோழையாவான்!
சேர்ந்திருந்தால் நன்மையுண்டு! அன்றித் தனித்திருந்தால்
நாரற்ற பூக்கள்தான் வாழ்வு.
78.வாழ்வை வளைத்தல் கடினம்! அமைகின்ற
வாழ்க்கை நடப்பதற் கேற்ப வளைந்துகொடு!
நாள்தோறும் நிம்மதி வாசலில் கோலமிடும்!
வாழ்வதற்கு விட்டுக் கொடு.
79.கொடுப்பதை அன்புடன் தந்தால் மகிழ்வார்!
வெடுக்கென்று பேசி முகஞ்சுழித்துத் தந்தால்
கொடுப்பது மாணிக்கம் என்றாலும் வாங்க
மறுத்திடும் உள்ளம் வெறுத்து.
80.வெறுப்பை மறந்தால் உறவு தழைக்கும்!
வெறுப்பை வளர்த்தால் பகையும் வளரும்!
கடும்பகை இன்றியே அன்பைப் பொழிவோம்!
நடுவோம் போதி மரம்.

0 Comments:
Post a Comment
<< Home