வாழ்வியல் அந்தாதி 81-90
81. மரங்கள் வளர்ந்தால் மழைபெறும் நாடு!
கழனி செழித்தால் வளம்பெறும் வீடு!
உயர்வின் உயிரே தமிழென்று பாடு!
உலகமே நீயெழுதும் ஏடு.
82. ஏடுகளின் மூலந்தான் முன்னோரின் நாகரிகத்தை
கூடு, குகைகளில் வாழ்ந்த வரலாறை
சூடு பறக்கச் சுழன்றடித்த போர்முறையை
நாடறிய நாம்கற்றோம் நன்கு.
83.நன்கு படித்தவர்கள் நாடறிய வாழ்பவர்கள்
என்றும் தனிமனித நல்லொழுக்கப் பண்புகளைக்
கண்போலப் போற்றவேண்டும்! கண்ணிமைபோல் காக்கவேண்டும்!
இன்றேல் உலகமே! தூற்று.
84. தூற்றும் செயல்களை வேண்டியவர் செய்துவிட்டால்
போற்றும் நிலையெடுக்கும் போலித் தனத்தாலே
காற்றடிக்கும் திக்கெல்லாம் காகிதமாய்ச் செல்லாதே!
தூற்றுவதைத் தூற்று நிமிர்ந்து.
85 .நிமிர்ந்தோம் எனநினைப்போம் அப்போது வாழ்க்கை
குனியவைத்துப் பார்க்கும்! சோர்ந்திடுவோம்! உடனே
நிமிரவைக்கும்! வாழ்க்கை நகர்த்துகின்ற காய்கள்
மனிதனுக்குப் பாடமென்று சொல்.
86. சொல்வதை நேர்படச் சொல்வதை விட்டுவிட்டுக்
கள்ளத் தனமாகப் புறம்பேசி வாழாதே!
உள்ளக் குமுறல் உளைச்சலுக்கு வித்தாகும்!
புல்லருக்குப் பொய்மையே சொத்து.
87. சொத்துக்கள் உட்பகையைத் தூண்டிவிட்டுச் சொந்தங்கள்
கட்டவிழ்ந்து போர்க்கோலம் பூணவைத்துப் பார்த்திருக்கும்!
விட்டுக் கொடுக்கும் மனக்கதவை மூடிவிடும்!
சொத்தே உயிர்க்கொல்லி நோய்.
88 . நோய்களின் தாக்கம் உடற்பரப்பை மொய்த்தால்
நோய்கள் குணமாக இங்கே மருந்துண்டு!
நோய்வடிவில் நாளும் கவலைகள் உள்ளத்தை
மேய்ந்தால் மருந்துண்டோ? செப்பு.
89. செப்புப் பதுமைகள் வைத்து விளையாடும்
சிற்றில் பருவத்துச் சின்னக் குழந்தைகள்
தத்தித் தவழ்ந்தே மழலைத் தமிழ்ச்சொல்லால்
திட்டும் அழகே அழகு.
90. அழகின் சிரிப்பு நிறங்களில் அல்ல!
உயர்வான எண்ணம் உறவாடும் உள்ளம்
அழகின் திருக்கோயில் ஆகும்! இதுதான்
அழகின் இலக்கணக் கோடு.

0 Comments:
Post a Comment
<< Home