வாழ்வியல் அந்தாதி 21-25
21. குணங்களில் நல்லகுணம் கெட்டகுணம் என்றே
இனம்பிரித்து வைத்துள்ளார்! நல்லகுணம் ஏற்றால்
மனங்குளிரும்! கெட்டகுணம் தத்தளிக்க வைக்கும்!
தினவாழ்வில் நற்குணத்தைப் போற்று.
22. போற்றுவதைப் போற்றும் பெருந்தன்மைப் பண்புடன்
தூற்றுவதைத் தூற்றும் துணிவும் இணைந்துவிட்டால்
காற்றடிக்கும் திக்கெல்லாம் காகிதமாய் மாறமாட்டார்!
போற்றும் செயல்களைச் செய்.
23. செய்யும் கடமையை எப்படியும் செய்யவேண்டும்!
செய்த பிழைகளுக்குக் காரணத்தைத் தேடாதே!
செய்ய முடிந்ததைச் சிந்தித்துச் சொல்லிவிடு!
செய்தால் மனதார வாழ்த்து.
24. வாழ்த்துவதும் ஊக்கம் கொடுப்பதும் முன்னேற்றும்!
தாழ்த்துவதும் அண்டிக் கெடுப்பதும் பாழாக்கும்!
தாழ்வு மனப்பான்மை வாழ்வைத் தகர்த்துவிடும்!
வாழ்ககையே வாழ்வதற்கு வாய்ப்பு,
25. வாய்ப்பு வரும்பொழுது நன்கு பயன்படுத்து!
வாய்ப்பை நழுவவிட்டு நாளும் புலம்பாதே!
வாய்ப்பே கிடைக்காமல் தவிப்பவர்கள் ஏராளம்!
வாய்ப்பின் உருவே இறை.
0 Comments:
Post a Comment
<< Home