இடன்அறிதல் ---50
------------------------------------------------------
இடன்அறிதல் ---50
----------------------------------------------------------------
பகைப்புலத்தை வெல்கின்ற வாய்ப்புவரும் மட்டும்
செயற்களத்தில் இறங்குவது நல்லதல்ல இங்கே!
பகவரையும் எளிதாக எண்ணுவதும் தவறு!
மனவலிமை உள்ளவர்க்கு பாதுகாப்பும் இங்கே
துணையாக அமைந்துவிட்டால் பலநன்மை சேரும்!
சந்திக்கும் களந்தன்னைத் தேர்ந்தெடுத்துத் தன்னைப்
பாதுகாத்து மோதினால்தான் வலிமையற்ற மனிதனும்
வெற்றிவாகை சூடுவான் தன்திறமை காட்டி!
தக்கதொரு இடமறிந்து தாக்குகின்ற போது
வெல்லுகின்ற பகைப்புலமும் செயலிழந்து போகும்!
தண்ணீரில் பிறஉயிரை முதலைதான் கொல்லும்!
தரைமீது முதலையைப் பிறஉயிர்கள் கொல்லும்!
தரைமீது ஓடுகின்ற பிரமாண்டத் தேரோ
கடல்மீது அரையடியும் ஓடுவது கடினம்!
கடலிலே மிதக்கின்ற கப்பல்கள் எல்லாம்
தரைமீது ஓடத்தான் தத்தளிக்கும் பாராய்!
இடமறிந்து செய்கின்ற செயல்களுக்கு எல்லாம்
அஞ்சாமை துணைபோதும் வேறுதுணை வேண்டாம்!
சிறுபடைகள் கொண்டவனும் இடமறிந்து தொடுத்தால்
பெரும்படைகள் கொண்டவனும் வெல்வதுவோ கடினம்!
பாதுகாப்பின் அம்சங்கள் இல்லாத போதும்
பகைவரிடம் சென்றேதான் முறியடித்தல் கடினம்!
பாகனையும் பகைவனையும் பந்தாடும் யானை
சேற்றினிலே சிக்கிவிட்டால் நரிகூடக் கொல்லும்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home