கண்ணோட்டம் ---58
திருக்குறள் குழந்தைப் பாடல்
-----------------------------------------------------------
கண்ணோட்டம் ---58
----------------------------------------------------------------
அன்பும் இரக்கமும் அருமைப் பண்புகள்!
----------------------------------------------------------------
அன்புடன் இரக்கமே கண்ணோட்டப் பேரழகு!
அத்தகையப் பண்புகளால் இவ்வுலகம் வாழ்கிறது!
இத்தகையப் பண்புகளோ இல்லாமல் வாழ்பவர்கள்
இவ்வுலக நிலத்திற்குச் சுமையாவார் நாள்தோறும்!
பாடலுக்கு ஒன்றாத பண்ணாலே என்னபயன்?
கண்ணோட்டம் இல்லாத கண்களாலே பயனில்லை!
கண்ணோட்டம் காட்டாத கண்களிங்கே முகந்தன்னில்
இருந்தாலும் எந்தவிதப் பயன்களுமே இல்லையென்போம்!
கண்களுக்கு அணிகலனோ இரக்கமென்னும் பண்பாகும்!
இரக்கமற்ற கண்களெல்லாம் கண்களல்ல புண்கள்தான்!
இரக்கத்தைக் காட்டுகின்ற கண்ணிருந்தும் காட்டாதோர்
மண்மீது எழுதிவைத்த இயங்காத மரம்போல்தான்!
கருணைமனம் கொண்டவரின் கண்கள்தாம் கண்களாகும்!
இப்பண்பு இல்லாதோர் கண்ணற்றோர் எனப்படுவார்!
தன்கடமை தவறாமல் கருணைக்கண் கொண்டவர்க்கே
இவ்வுலகப் பரப்பெல்லாம் உரிமைதான் எனச்சொல்வோம்!
தண்டிக்க வேண்டிய மாந்தரிடம் பரிவுகாட்டி
குற்றத்தைப் பொறுப்பதே பெருந்தன்மைப் பண்பாகும்!
கண்ணோட்டம் உள்ளவர்கள் தம்முடனே நெருக்கமாகப்
பழகுவோர்கள் நஞ்சையே தந்தாலும் ஏற்பார்கள்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home