Thursday, March 26, 2026

அவை அறிதல் -- 72

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

அவை அறிதல் -- 72

----------------------------------------------------------------

அவையடக்கம் மதிப்பை உயர்த்தும்!

----------------------------------------------------------------

சொற்கள் வகையை அறிந்திருக்கும்

அறிஞர் தன்மை அறிந்தேதான்

பேச வேண்டும் உணர்ந்திடுவாய்!


பேசு வோர்கள் இடையிடையே

அவைமனம் உணர்ந்து பேசவேண்டும்!


கேட்போர் மனதை அறியாமல்

பேசும் பேச்சால் பயனில்லை!


அறிஞர் அவையில் அறிஞராக

அறிவிலி அவையில் அறிவிலியாய்

வெண்சுண் ணாம்பாய் இருக்கவேண்டும்!


முந்திரிக் கொட்டை போலத்தான்

அறிஞர் அவையில் பேசாத

அடக்கப் பண்பே நன்மைதரும்!


அறிவிற் சிறந்தோர் கூட்டத்தில்

பேச்சால் சிறுமைப் படுவதுவோ

ஒழுக்கம் தவறும் நிலைபோலாம்!


தெளிவாய்ச் சொல்லை அறிந்திருக்கும்

அறிஞர் அவையில் கற்றறிந்தோர்

பேச்சில் புலமை வெளிப்படுமே!


தானே அறியும் திறனுள்ள

அறிந்தோர் அவையில் பேசுவது

தானே வளரும் பயிருள்ள

பாத்தியில் நீரைப் பாய்ச்சுவதாம்!


தனக்கிணை இல்லா அவையினிலே

பேசும் பேச்சோ சுத்தமற்ற

முற்றந் தன்னில் அமிழ்தத்தை

கொட்டி விட்ட நிலையாகும்!


0 Comments:

Post a Comment

<< Home