வாழ்வியல் அந்தாதி 91-100
91.கோடுகளை நீரில் நிலத்திலே வான்வெளியில்
நாடுகள் தங்களுக்குள் போட்டு வரையறுத்தார்!
கோடுகளைத் தாண்டினால் மக்களைக் கொல்கின்றார்!
கேடுதரும் கோடுகளை நீக்கு.
92.நீக்கும் களைகளை வெட்டி, பயிரினத்தைக்
காக்கும் முயற்சி எடுத்தால் வயல்களில்
நோக்கும் இடமெல்லாம் நெற்கதிர்கள் கூத்தாடும்!
நாட்டின் உயிரே உழவு.
93.உழவுத் தொழிலை உயிரெனப் போற்றி
உழைக்கும் உழவர்கள் வாழ்வில் வளங்கள்
நிலையாக வேண்டும்! நிம்மதியும் வேண்டும்!
உலகே உழவரை வாழ்த்து.
94.வாழ்த்தினால் வாழலாம்! வீழ்த்தினால் வீழ்ந்திடுவோம்!
வாழ்த்தப் பழகுங்கள் உற்சாகம் ஊற்றெடுக்கும்!
காலம் வசப்படும்! அனைவரும் மதித்திடுவார்!
வாழ்த்தி மகிழ்வோம் தினம்.
95.தினமும் வளர்கின்றோம் தேய்பிறை என்பார்!
மனமே! நிலவுக்கோ தேய்பிறைக்குப் பின்பு
தினமும் வளர்பிறைதான்! நிலவை ரசிப்போம்!
மனிதனோ தேய்வ தியல்பு.
96.இயல்பான மாற்றம் நிலையாக நிற்கும்!
இயல்பாக மாறும் மனமாற்றம் ஒன்றே
பயனளிக்கும்! இல்லறத்தில் ஒற்றுமை கூடும்!
தளமற்ற ஒற்றுமை வீண்.
97.வீண்புரளி தன்னைப் பரப்பித்தான் அச்சத்தைத்
தூண்டிவிடும் வக்கிரச் சிந்தனை கொண்டவர்கள்
மானே! மிருகமனங் கொண்டலையும் கூட்டத்தார்!
வீணர்கள் என்றே விலக்கு.
98. விலக்குவதை இங்கே விலக்காமல் விட்டால்
கலக்கத்தில் வாழ்க்கை கரையுடைத்துச் செல்லும்!
விலக்கிவிட்டால் வாழ்வே ஒளிமயமாய் மாறும்!
களங்கமின்றி வாழ்தல் அறிவு.
99 அறிவிலே ஆற்றறிவும் ஐய்ந்தறிவும் உண்டு!
நெறிப்படுத்தி வாழ்பவர் ஆறறிவு மாந்தர்!
நெறிபிறழும் ஐந்தறிவு கொண்ட விலங்கு!
நெறியுடன் வாழ்தல் மனிதம்.
100 மனிதம் தழைத்தால் உலகம் சிறக்கும்!
புனிதம் நிலைக்கும்! அறவழி ஓங்கும்!
மனிதநேயத் தொண்டுகள் பொங்கிப் பெருகும்!
மனைதோறும் மங்கலம் உண்டு.
0 Comments:
Post a Comment
<< Home