Wednesday, December 24, 2008

கொடுமையான அன்பு

பரபரப் பான அன்பில்
பக்குவத் தெளிவே இல்லை!
நிரந்தர மாக வாழ்வில்
நிலைத்திடும் உறுதி இல்லை!
அரசியல் உறவைப் போல
அடிக்கடி திசைகள் மாறும்!
உரிமையில் நெருங்கிப் போனால்
உதறியே விலகிக் கொள்ளும்!

அன்பெனும் சிறைக்குள் மாந்தர்
அடிமையாய்க் கிடக்கும் போதுத்
தன்மனம் சொல்லும் போக்கில்
தயக்கமே இன்றிச் செல்வார்!
முனையள விங்கே அன்பில்
முறிவினை உணர்ந்தால் போதும்
மனமெலாம் இருளில் மூழ்க
மாயமே வாழ்க்கை என்பார்!

எட்டியே இருந்து கொண்டு
எளிமையாய் உண்மை அன்பை
சிட்டிகை தந்தால் போதும்
சிறப்புடன் வளர்ந்தே ஓங்கும்!
ஒட்டியே நின்று கொண்டு
உண்மையோ சிறிதும் இன்றிக்
கொட்டியே கொடுத்தால் கூட
கொடுமையே அந்த அன்பு!

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home