பெருங்கவி பெற்ற பரிசு!
காலத்தை உருவாக்கும்
கவிஞருக்குப் பரிசொன்றைக்
காலமகள் தருவதற்குக்
கனிவுடனே முடிவெடுத்தாள்!
ஞாலத்தைப் படம்பிடித்து
ஞானத்தின் மடிதவழும்
சீலர்கள் சிறப்படையச்
செய்வதுதான் கடமைஎன்றாள்!
எங்கெங்கோ அலைந்துசென்றாள்!
எத்துணையோ பொருள்வகையைத்
தங்குதடை எதுவுமின்றித்
தான்சென்றே அறிந்துவந்தாள்!
இங்கிருக்கும் வளமனைத்தும்
இவர்படைக்கும் கவிவரிமுன்
மங்கிவிடும்! இதைத்தருதல்
மதிப்பில்லை எனவுணர்ந்தாள்!
அழிந்துவிடும் பொருளனைத்தும்!
அழியாமல் அவனியிலே
செழிப்பதுவோ வறுமைதான்!
சிந்தித்தாள்! செயல்பட்டாள்!
பிழிந்தெடுக்கும் வறுமையினைப்
பெருங்கவியே! பரிசாக
வழங்குகிறேன் எனத்தந்தாள்!
வழிவழியாய்த் தொடர்கிறது!
மதுரை பாபாராஜ்
1989
0 Comments:
Post a Comment
<< Home