கர்ணனின் மனைவி
கர்ணன் அரச பரம்பரை என்பது
கர்ணனுக்கும் கண்ணனுக்கும் குந்திக்கும் -- பாரில்
தெரியும்!இருந்தாலும் வேந்தனின் ஆற்றல்
மிளிர்ந்திட வாழ்ந்தான் நிமிர்ந்து.
எண்ணற்ற ஆற்றல்கள் ஏந்தினாலும் தேரோட்டி
மைந்தன்தான் தன்கணவன் என்றெண்ணி அம்மனைவி
அன்பு மதிப்பைக் கணவனுக்கோ எள்ளளவும்
தன்பங்காய்த் தந்ததில்லை இங்கு.
போர்க்களம் நோக்கிப் புறப்படும் நேரத்தில்
ஆரத்தி சுற்றியேதான் வாழ்த்தி வழியனுப்ப
வேல்விழியாள் அங்கே வராமல் புறக்கணித்தாள்!
நேரிழையாள் ஆணவத்தைப் பார்.
சாதிச் செருக்கின் மயக்கத்தில் கர்ணனைச்
சோதித்துப் பார்த்தாள் இல்லாள்தான் -- வேதனையில்
போர்முனைக்குச் செல்லும்முன் தன்னுயிராம் இல்லாளைப்
பார்க்க நினைத்திருப்பான் ! போ.
கர்ணனோ போரிலே மாண்ட பிறகுதான்
கவ்விய பொய்மை கலைகிறது -- தன்தவறை
எண்ணி உருகிப் புலம்புகின்றாள்! என்செய்ய ?
மன்னன் வருவானோ மீண்டு?
சாதிவெறிக் காலடியில் நானிருந்தேன்!என்னவனை
வேதனைக்கே உள்ளாக்கி வேடிக்கை பார்த்திருந்தேன்!
மேதினியில் என்னைப்போல் இக்கொடுமை கட்டவிழ்த்த
வேறொருத்தி உண்டோ ?விளம்பு.
எண்ணற்ற ஆற்றல்கள் கொண்ட கணவனை
என்னுடைய ஆணவத்தால் துச்சமாகப் பார்த்தேனே!
என்மனமே என்னை வெறுக்கிறதே!என்செய்வேன்?
பண்பகத்தை என்றுகாண்பேன்?நான் .
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home