Friday, June 14, 2019


 சித்தார்த்தன் புத்தரானார்!

கபில வத்து நாட்டிற்கு
சுத்தோதனந் தான் அரசரானார்!
அவரது அரசி மகாமாயி
அழகும் பண்பும் நிறைந்தவராம்!

கருவுற் றிருந்த மகாராணி
வசந்த காலப் பருவத்தில்
தனது பெற்றோர் நாட்டிற்குப்
பயணந் தன்னை மேற்கொண்டார்!

அழகிய லும்பி தோப்பினிலே
சால மரத்தின் கீழேதான்
குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்!
மகனைத் தானே பெற்றெடுத்தார்!

மீண்டும் திரும்பி அரண்மனைக்கே
வந்தார் மகிழ்ச்சி பொங்கத்தான்!
இளவர சனையோ சித்தார்த்தன்
என்ற பெயரில் அழைத்தார்கள்!

இந்தக் குழந்தை ஒருநாளோ
ஞானம் தேடிச்  சென்றேதான்
ஞானி யாகி புத்தராவார்!
சான்றோர் சொல்லி வாழ்த்தினரே!

படிப்படி யாக வளர்ந்தவனோ
பருவப் படியிலே ஏறியதும்
திருமணம் முடிக்க தந்தைதான்
விரும்பி ஏற்பாடு செய்திட்டார்!

அழகும் குணமும் நிறைந்திட்ட
அன்பரசி யான யசோதராவை
இளவர சனுக்கு மணமுடித்தார்!
இல்லற வாழ்க்கை தொடங்கியது!


அரண்மணை வாழ்வை அனுபவிக்க
இளவர  சனுக்கு வேண்டியதை
எல்லாம் தந்தே மகிழவைத்தார்!
பார்த்துப் பார்த்துச் சுற்றிவந்தார்!

பக்குவ மான இளவரசன்
வெளியே உலகைக் காண்பதற்கு
விருப்பப் பட்டான் தேடலுடன்!
ஒருநாள் சென்றான் காண்பதற்கு!

முதியவர் ஒருவர் தள்ளாடும்
நிலையைக் கண்டான் அங்கேதான்!
முதுமை வந்தால் மனிதர்கள்
இப்படித் தானோ எனவியந்தான்!

எலும்பும் தோலு மாகத்தான்
இருந்தவன் ஒருவனைக் கண்ணுற்றான்!
அழகு கம்பீரம் போயேதான்
சுருக்கம் விழுந்த நிலைகண்டான்!

இறந்து போன ஒருவனையோ
தோளில் சுமந்து சென்றிருந்த
காட்சியைக் கண்டே கலங்கிவிட்டான்!
சோகம் மனதைக் கவ்வியது!

நானும் மனைவியும் உறவுகளும்
ஒருநாள் இப்படித் தான்போவோம்!
முதுமை, நோய்களைத் தவிர்த்திடவோ
உலகில் நம்மால் முடியாது!

இவற்றைக் கண்ட இளவரசன்
இதயம் ஆழ்ந்து எண்ணியது!
அனைத்தும் மாயை என்றேதான்
உணர்ந்தான் நடந்தான் தனிமையிலே

இருபத் தொன்பது வயதினிலே
இளமை ததும்பும் பருவத்தில்
ராகுலன் பிறந்த நாளினிலே
அரண்மனை விட்டே ஏகிவிட்டான்!

அரச வாழ்க்கை பிடிக்கவில்லை!
வளங்கள் இன்பம் பிடிக்கவில்லை!
மனைவி மகனை விட்டுவிட்டே
ஞானம் தேடிப் புறப்பட்டான்!

அரச உடையைக் களைந்தெறிந்தான்!
துறவுக் கோலம் ஏந்திவிட்டான்!
துன்பத் திற்குத் தீர்வுகாண
நாட்டை விட்டே சென்றுவிட்டான்!

அலைந்தான் திரிந்தான் கயாசென்றான்!
அருகில் இருந்தது கிராமந்தான்!
இரந்தே வாழத் தகுந்த இடம்
இதுவென் றறிந்தே  தங்கிவிட்டான்!

போதி மரத்தின் கீழமர்ந்தான்!
தோலும் எலும்பும்  எஞ்சினாலும்
நகர மாட்டேன் இங்கிருந்து!
ஞானம் அடைய சூளுரைத்தான்!

முப்பத் தைந்து வயதினிலே
முழுமை யான ஞானத்தை
அடைந்தே புத்தராய் உயர்ந்திட்டான்!
அடக்கம் பொறுமை உருவானான்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home