Tuesday, June 18, 2019

பேச வெறுப்பா?

என்னென்ன பேசினோம்! எப்படிப் பேசினோம்!
கண்ணாலே பேசினோம்! சைகையால் பேசினோம்!
இந்தநேரம் அந்தநேரம் இல்லாமல் பேசினோம்!
சின்ன இடையூறும் மாமலைபோல் தோன்றியதே!
அந்த அளவுக்குப் பேசினோம்! வேலைக்குச்
சென்றுவந்து வீட்டுக்குள் வந்தே அமர்வதற்குள்
அன்பைப் பொழிந்தே அடுக்கடுக்காய்ப் பேசித்தான்
இன்ப மகிழ்ச்சியில் ஒன்றிக் களித்தோமே!
இன்றெனக்கு வேலையில்லை! வாட்டும் முதுமையிலே
இங்கே வருமானம் நின்றுவிட்ட கோலத்தில்
நம்மைத் தனிமைச் சிறையிலே காலமோ
பொன்விலங்கைக் கட்டி முடக்கியதே! பேசுகின்ற
எண்ணம் உனக்கில்லை! என்னை வெறுக்கின்ற
வண்ணம் கொடுமையென்ன செய்தேன்? தெரியவில்லை!
என்னை உயிரென்றாய்! உயிரோட்டம் என்றுரைத்தாய்!
நம்பினேன்! நம்பினேன்! இன்றோ தவிர்க்கின்றாய்?
என்னை விலக்கிப் புறக்கணிக்கும் போக்கெடுத்தாய்!
அன்பே அனலானால் முள்ளானால்
என்செய்வேன்?
கண்ணீர் நெருப்பை விழுங்கி உயிர்துடிக்க
உன்நினைவில்  வாழ்கின்றேன்  நான்.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home