Tuesday, June 18, 2019

என்னவள் எங்கே?

என்னை நினைத்தேதான் என்னையே சுற்றிவருவாள்!
கொஞ்சுமொழி பேசிக் குலவிடுவாள்! அன்பிலே
எந்தன் எலும்பை உருக்கி உருகவைப்பாள்!
கண்டதும் துள்ளுவாள் வந்து.

கொஞ்சநேரம் பார்க்காமல் சென்றுவிட்டால்  தேடுவாள்!
அன்புடன்  கூப்பிடுவாள்  என்னைத்தான் பாசமுடன்!
இந்தப் பரபரப்பைப் பார்த்தேதான் மற்றவர்கள்
என்னென்ன கேலிபேசி் இங்கே  சிரிப்பார்கள்!
என்னவள் நாணுவாள் நின்று.

இப்படி வாழ்ந்தவள் இன்றேன் மாறிவிட்டாள்?
நற்றமிழே! நானோ மணிக்கணக்கில் என்னவளை
விட்டுவிட்டு நீங்கித்தான் செல்கின்றேன்! என்னவளோ
சற்றும் கவலையே இன்றி இருக்கின்றாள்!
பற்றற்று வாழ்கின்றாள் ஏன்?

இன்றிருக்கும் என்னவள் என்னவளே இல்லையே!
அன்றிருந்த என்னவளைத் தேடுகின்றேன் ஏங்குகின்றேன்!
சிந்தனையில் தேங்கிவிட்ட சித்திரத்தை எண்ணுகின்றேன்!
என்னுயிராய் என்னையே தன்னுயிராய் எண்ணியவள்
இன்றெங்கே? தேடுகின்றேன் நான்.

மாறிவிட்டாள்! மாற்றங்கள் ஏமாற்ற மாகத்தான்
வாடி வதங்கவைத்துப் பார்க்கிறதே! என்செய்வேன்?
கோடிமுறை சொல்லிவிட்டேன் கேட்க மறுக்கின்றாள்!
தூசியாக எண்ணுவதும் ஏன்?

 மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home