Tuesday, March 17, 2020

95. மருந்து அதிகாரமும் கொரோனாவும்

குறள் 941:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

மருத்துவ நூலோர் விளக்குகின்ற வாதம்
பெருகிவரும் பித்தம்,கபமும்-- சரிசம
மின்றி விளங்கினால் நோய்களே மொய்த்திருக்கும்!
இங்கே கொரோனாவும் தான்.

குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

உண்ணும்உணவுவகை உள்ளே செரித்ததும்
உண்டால் மருந்தோ உடலுக்கு--என்றுமே
வேண்டிய தில்லை! கொரோனாவும் நோய்களும்
தாண்டும் உடலைத் தவிர்த்து.

குறள் 943

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

உண்ட உணவு செரித்த பிறகுதான்
உண்ணும் உணவின் அளவறிந்தே--
உண்பதுதான்
நம்மை நெடுநாள் கொரோனாவோ நோய்களோ
அண்டாமல் வாழவைக்கும் சொல்.

 குறள் 944

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

உண்டதை நன்கு செரித்தபின்பு தன்னுடல்
இங்கேற்கும் நல்லுணவை உண்ணவேண்டும்-- என்றும்
கொரோனாவோ மற்றெந்த நோயோ
வராமல் தவிர்க்கலாம் சொல்.

குறள் 945

மாறுபா டில்லாத உண்டிமறுத்
துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.

ஒவ்வா தெனத்தெரிந்தால் அந்த உணவினை
எள்ளளவும் ஏற்காது,ஏற்கின்ற-- நல்லுணவை
எல்லைக்குள் உண்டால் கொரோனாவால் நோய்களால்
தொல்லைகள் இல்லை உணர்.

குறள் 946

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

அளவாய் உணவை அருந்தினால் நோய்கள்
கரோனா களமமைத்துத் தாக்காது-- அளவுக்
கதிகமாய் உண்டாலோ உண்பவர்க்கு நோயால்
அதிகம்தான் துன்பமென்று சொல்.

குறள் 947

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

பசியின் அளவறிந்தே உண்ணவேண்டும்! நாளும்
அதிகமாய் உண்டால் கொரோனா மற்றும்
அதுபோன்ற நோய்கள் அளவின்றி தாக்கி
முடக்கித்தான் துன்புறுத்தும் இங்கு.

 குறள் 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய்களை,காரணத்தை ஆராய்ந்து பார்த்தேதான்
நோய்தீர்க்கும் நன்முறையை ஆராய்ந்து-- சோதித்துப்
பார்த்தே கொரோனாக்கோ நோய்க்கோ சிகிச்சைகள்
நாளும் கொடுக்கவேண்டும் இங்கு.

குறள் 949

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

நோயாளிக் கென்ன வயது,நோயளவு
நோயிருக்கும் காலத்தை எல்லாம் மருத்துவர்
ஆய்ந்தே கொரோனாநோய் உட்பட நோய்களுக்குத்
தேர்ந்த சிகிச்சை தரவேண்டும்  இங்குதான்!
சீராய்க் குணமாக்கும் செப்பு.

குறள் 950

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

நோயாளி, நோய்தீர்க்க  வல்ல மருத்துவர்
நோய்க்கு மருந்து, துணைபுரிபவர் என்றேதான்
என்றும் மருத்துவம் நான்கு வகைதானே!
இன்றைய தொற்று கொரோனா தனிமைக்குத்
தொண்டுள்ளம் கொண்ட செவிலியர் மட்டுமே
தங்கும் துணையாம் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home