Friday, July 17, 2020

பாலாவின் சங்கச் சுரங்கம்!

ஒன்பது!

17.07.20

இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!

 மகுடம்-- தலை!

மகுடம் தலையாக இருப்போர் சிலரே!
தலையே மகுடமாய் உள்ளோர் சிலரே!இலக்கணம் சொன்னார் நற்புக ழுக்கே!
சுரங்கத்தில் பாலாவின் முத்து.

சங்க இலக்கியம் கூறும் நிலையாமை
இங்கே துறவறம் ஏற்பதற் கல்லவே!
மண்ணக வாழ்வின் ஒழுக்கத்தின் மாண்பாகும்!
என்றுரைத்த பாலாவை வாழ்த்து.

வாழ்க்கையின் வகை!

பத்தாம் உரையிலே பத்துவகை வாழ்க்கையை
முத்தாய்ப்பாய்க் காட்டி விளங்கவைத்த பாங்கினை
முத்தமிழால் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!
சத்தான சங்கத் தமிழ்.

நம்பி நெடுஞ்செழியன்!

இல்லத்  தரசியின் தோளைத் தழுவினான்!
உள்ளங் கவர்ந்திடும் சோலை மலரணிந்தான்!
சந்தனம் பூசினான்! வெம்பகையைச்  சந்தித்தான்!
என்றும் பணிந்ததில்லை! தற்புகழ்ச்சி என்றுமில்லை!
நண்பரை வாழ்த்தினான்! தாவென்று கேட்டதில்லை!
தந்தே உயர்ந்தவன்! வேந்தர் அவையிலே
தன்புகழ் நாட்டியவன்! இப்படிப் பட்டவனை
என்னமோ செய்யுங்கள் இங்கு.

சாம்ராட் அசோகனா? இல்லை! இவனிங்கே
சாமான்யன்! நம்பி! குறுநில மன்னனே!
வாழ்ந்து முடிந்தான் இயற்கையும் எய்தினான்!
பாண்டியனை இங்கே எரித்தல், புதைத்தலைச்
சூழ்ந்திருந்து பேசித்தான் ஏங்குகின்றார்
ஊர்ப்பெரியோர்!
வாழ்வின் நிலையாமை பார்.

தலைசாய்த்த நம்பி நெடுஞ்செழியன்!

*கலித்தொகை :
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச *

தன்னைப் புகழ்கின்ற போதுநாம் நாணத்தால்
மண்பார்த்து நம்தலை சாய்ந்திருக்கும் கோலம்போல்
மன்னன் தலைசாய்த்து மாண்டு கிடக்கின்றான்!
கண்முன் கலித்தொகை காட்சி உவமையைக்
கொண்டுவந்த பாலாவை வாழ்த்து.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது!

பாலாவின் எண்ணத்தை வண்ணத்தில் ஓவியமாய்
ஞாலமே போற்றுமாறு தீட்டுகின்ற ஆற்றலின்
வேழமாய் ட்ராட்ஸ்கி மருது திகழ்கின்றார்!
வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.

மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு
ராமு தாத்தாவுக்கு காணிக்கை!

ஆண்டாண்டு காலமாக மக்களிடம் பத்துரூபாய்
வாங்கி தரமாய் உணவளித்த ராமுதாத்தா
ஏங்கவிட்டு மாண்டார் மதுரை நகரிலே!
தூங்கா நகரில் பசிப்பிணி யாற்றிய
மாமனிதர் ராமுவுக்கு பாலாவின் காணிக்கை
ஆக்கினார் சங்கச் சுரங்க நிகழ்வினை!
பாலாவின் பண்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home