Tuesday, January 05, 2021

60 ஊக்கமுடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!

60 ஊக்கமுடைமை

குறள் 591:

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்

உடைய துடையரோ மற்று.


ஊக்கம் உடையாரே எல்லாம் உடையராம்!

ஊக்கமற்றோர் ஒன்றுமற்றோர் சொல்.

குறள் 592:

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.


ஊக்கம் நிலைத்திருக்கும்! மற்ற பொருட்செல்வம்

நீங்கும் நிலைக்கா துணர்.

குறள் 593:

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்

ஒருவந்தங் கைத்துடை யார்.


ஊக்க முடையவர்கள் செல்வம்  இழந்தாலும்

ஊக்க மிழக்கமாட்டார் இங்கு.

குறள் 594:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.


ஊக்கம் உடையவரைச் செல்வங்கள் தேடிவந்தே 

போற்றி வணங்கும் விழைந்து.

குறள் 595:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு.


நீரின் உயரம் மலர்க்காம்  புயருமிங்கே!

வாழ்விலே உள்ளத்தின் ஊக்கத்திற் கேற்பத்தான்

நாளும் உயர்வு வரும்.

குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.


எண்ணம் உயர்வாய் இருக்கவேண்டும்!

கூடவில்லை

என்றாலும் சோர்வடைதல் தப்பு.

குறள் 597:

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.


போர்க்கள யானையை அம்புகள் தைத்தாலும்

சோர்வின்றி நிற்பதைப்போல் ஊக்கத்தைக் கைவிடாமல்

வாழவேண்டும் மானிடர் இங்கு.

குறள் 598:

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.


அள்ளி வழங்குகின்ற உள்ளமற்றோர் 

வள்ளலென்ற

நற்பெருமை கொள்ளவழி ஏது?

குறள் 599:

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.


புலியோ எதிர்வந்தால் யானையோ அஞ்சும்!

உருவிலில்லை ஊக்கம்! துணிவு.

குறள் 600:

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்

மரமக்க ளாதலே வேறு.


ஊக்கமே நெஞ்சுறுதி! ஊக்கமற்றோர் மக்கள்தான்

பார்வைக்கே! ஆனால் மரம்.

























0 Comments:

Post a Comment

<< Home