68 வினைசெயல்வகை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
68 வினைசெயல்வகை
குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
செயல்களைச் செய்யத் துணிந்தபின் கால
விரயத்தில் ஈடுபட்டால் தீது.
குறள் 672:
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
காலத்தைத் தாழ்த்தாமல் செய்வதைத் தாழ்த்தாமல்,
தாழ்த்துவதைத் தாழ்த்தியும் செய்.
குறள் 673:
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
இயன்றால் செயல்செய்! இயலவில்லை என்றால்
முயற்சியைச் சிந்தித்துச் செய்.
குறள் 674:
வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
செயலோ பகையோ அரைகுறையாய் விட்டால்
நெருப்பை அணைக்காமல் விட்டதுபோல் இங்கே
பெருங்கேடு தன்னைத் தரும்.
குறள் 675:
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
பொருள்கள் கருவியுடன் காலம் செயலும்
இடத்துடன் ஐந்தும் செயல்செய்யத் தேவை!
நடைபோட வைக்கும் நிமிர்ந்து.
குறள் 676:
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
செயலை,தடையை, முடிவின் பயனைக்
கணித்தே செயல்களைச் செய்.
குறள் 677:
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.
அனுபவம் உள்ளவரைத் தேர்ந்தெடுத்துப் பேசி
செயலில் இறங்குதல் நன்று.
குறள் 678:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
ஒருசெயலில் உள்ளபோதே மற்றொன்றைச் செய்தல்
ஒருயானை வைத்தேதான் மற்றொன்றை இங்கே
பிடிப்பது போலாம் உணர்.
குறள் 679:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
நண்பருக்கு நல்லது செய்வதைக் காட்டிலும்
வன்பகையை நட்பாக்கல் நன்று.
குறள் 680:
உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
உடனிருப்போர் அஞ்சும் பகைவந்தால் நாமும்
அடங்கிப் பணிதல் அறிவு.
0 Comments:
Post a Comment
<< Home