Thursday, January 07, 2021

67 வினைத்திட்பம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

67 வினைத்திட்பம்

குறள் 661:

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.


செயலுறுதி என்றால் மனஉறுதி! மற்ற

நிலைகளோ வேறாகும் சொல்.

குறள் 662:

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.


தடைகள் வருமுன் களைதலும், வந்த

பிறகோ தளராமல் சந்தித்தல் இந்த

இரண்டும் அறிவுடையார் பண்பு.

குறள் 663:

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்.


செயலை முடித்துவிட்டுச் சொல்தல் வலிமை!

இடையில் தெரிந்தால் இடர்.

குறள் 664:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.


சொல்வ தெளிதுதான்! சொல்லியதைச் சொன்னவாறு

செய்தல் அரிதென் றுணர்.

குறள் 665:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.


செயல்களால் சாதித்தோர் சாதனையின் வெற்றி

அரசுவரை எட்டும்! அனைவரும் போற்றி

வரவேற்பார் இங்கே புகழ்ந்து.

குறள் 666:

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.


எண்ணியதைச் செய்யும் உறுதி உடையவரால்

எண்ணிய வெற்றியுண்டு சொல்.

குறள் 667:

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்

கச்சாணி யன்னார் உடைத்து.


உருவத்தைப் பார்த்தே இகழாதே நாளும்!

பெருந்தேர்க்குச் சிற்றாணி அச்சு.

குறள் 668:

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.


செய்யத் துணித்த செயலைத் தளராமல்

செய்து முடிப்பது நன்று.

குறள் 669:

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.


துன்பமே வந்தாலும் இன்பமாகும் நற்செயலை

என்றும் துணிச்சலுடன் செய்.

குறள் 670:

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டா துலகு.


எத்தகைய ஆற்றல்  இருந்தும் செயலுறுதி

இல்லையென்றால் போற்றமாட்டார் இங்கு.























0 Comments:

Post a Comment

<< Home