61 மடியின்மை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
61 மடியின்மை
( சோம்பல் இல்லாமை)
குறள் 601:
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
பேரொளி கொண்ட குடிப்பெருமை
சோம்பலால்
காரிருள் சூழ்ந்து கெடும்.
குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
குடும்பம் உயர்ந்திட சோம்பலின்றி ஊக்கம்
தொடுத்தே முயல்தல் சிறப்பு.
குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.
அறிவின்றி அக்கறையும் இல்லாமல் வாழ்ந்தால்
குடியழியும் சோம்பேறி முன்.
குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
சோம்பேறி வாழ்விலே குற்றம் பெருகும்!
சீரழிந்தே
தாழும் குடியின் புகழ்.
குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
காலத்தைத் தாழ்த்தல்,மறதியுடன் சோம்பலும் தூக்கமென்ற
நாலும் அழிவின் படகு.
குறள் 606:
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
சான்றோர் தொடர்பிருந்தும் சோம்பலே
வாழ்வானால்
காண்பாரோ நற்பெருமை இங்கு?
குறள் 607:
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
முயற்சியின்றி சோம்பி அலைந்திருந்தால் நாளும்
இகழ்ச்சிக்கே ஆளாவார் சொல்.
குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்.
குடும்பத் தலைவனோ சோம்பித் திரிந்தால்
பகைவர்க் கடிமைதான் கூறு.
குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
சோம்பலை விட்டுவிட்டால் வாழ்க்கை
குறைபாடு
நீங்கி நிறைவாகும் சொல்.
குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
சோம்பலற்ற மன்னன் உலகளந்து தன்கொடைக்கீழ்
ஆள்வது போல்பயனாம் சொல்.
0 Comments:
Post a Comment
<< Home