66 வினைத்தூய்மை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
66 வினைத்தூய்மை
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
நல்ல துணையிருந்தால் ஊக்கம் பெருகிவரும்!
நற்செயல்கள் நன்மை தரும்.
குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
நன்மை, புகழ்தராத எந்தச் செயலையும்
என்றும் புறக்கணித்தல் நன்று.
குறள் 653:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்.
உயரவேண்டும் என்றெண்ணி வாழ்வோர் செயலில்
களங்கமின்றிப் பார்த்தல் சிறப்பு.
குறள் 654:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
தெளிவும் அறிவும் உடையவர்கள் என்றும்
இழிசெயல் செய்யார் உணர்.
குறள் 655:
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
வருந்தவைக்கும் எச்செயலும் செய்யாதே! செய்தால்
மறுபடியும் செய்தல் தவிர்.
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
துடிக்கின்ற தாயின் பசிதணிக்க, சான்றோர்
பழிக்கும் செயல்செய்யா தே.
குறள் 657:
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.
பழிவழி வந்தசொத்தில் வாழ்வதினும் சான்றோர்க்
கிழிவான ஏழ்மையே மேல்.
குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
தகாத செயல்களைச் செய்தால் செயல்கள்
தொடர்ச்சியாய்த் துன்பம் தரும்.
குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
அழவைத்துச் சேர்த்தால் அழவைத்தே போய்விடும்! நல்ல
வழிவந்தால் மீண்டும் வரும்.
குறள் 660:
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
தீயவழிச் செல்வம் நிலைக்காது! பச்சைமண்
பானையில் நீரூற்றி சேமித்தல் போலாகும்!
நேர்வழிச் செல்வமே நன்று
0 Comments:
Post a Comment
<< Home