Friday, January 08, 2021

70 மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்த

70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் 691:

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.


நெருப்பில் குளிர்காய்தல் போலத்தான் நாளும்

வரம்பிற்குள் வேண்டும்  தொடர்பு.

குறள் 692:

மன்னர் விழைப விழையாமை மன்னரான்

மன்னிய ஆக்கந் தரும்.


மன்னர் விரும்புவதைத் தானும் விரும்பாத

நன்னிலை என்றும் மதிப்பு.

குறள் 693:

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.


தவறுகள் நேராமல்  பார்க்கவேண்டும்! அய்யம்

உருவானால் தீர்த்தல் அரிது.

குறள் 694:

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.


பெரியவர்கள் முன்னே இரகசியம்  பேசிச்

சிரிப்பதை என்றும் தவிர்.

குறள் 695:

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்காற் கேட்க மறை.


மறைவாகப் பேசினால் கேட்பதும் என்ன

நடந்தது என்று வினவுதலும் தப்பு! அவரே

பகிர்ந்தால் தெரிந்துகொள்தல் நன்று.

குறள் 696:

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல்.


மனநிலை, காலம் இவையறிந்தே ஏற்கும்

வினையறிந்து சொல்வது நன்று.

குறள் 697:

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.


பயனுள்ள செய்திசொல்! கேட்டாலும் எந்தப்

பயனற்ற  செய்தி தவிர்.

குறள் 698:

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோ டொழுகப் படும்.


உறவு, இளையவர் என்பதை விட்டுப்

பதவியை எண்ணிப் பழகு.

குறள் 699:

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.


வேண்டியவர் என்றே  அவரோ விரும்பாத

ஒன்றினைச் செய்தல் தவிர்.

குறள் 700:


பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.


நீண்டநாள் நண்பரென்றே நாமோ உரிமையுடன்

தீங்கிழைத்தல் என்றுமே கேடு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home