71 குறிப்பறிதல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
71
குறிப்பறிதல்
குறள் 701:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
சொல்லாமல் இங்கே முகக்குறிப்பைச் சொல்பவர்
இவ்வுலகம் மெச்சும் நகை.
குறள் 702:
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
துல்லியமாய் உள்ளம் நினைப்பதைச் சொல்பவர்
தெய்வத்திற் கொப்பாவார் கூறு.
குறள் 703:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.
முகக்குறிப்பை வைத்தே அகக்குறிப்பைச் சொல்வோர்
திறனறிந்து தக்கவைத்தல் நன்று.
குறள் 704:
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
குறிப்பறிவோர் மற்றும் அறியாதோர் என்றால்
அறிவால்தான் என்போம்! உறுப்புகளால் அல்ல!
அறிவே மனிதன் திறன்.
குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
குறிப்பறிந்து சொல்லாதோன் கொண்டிருக்கும் கண்கள்
உறுப்பன்றி என்னபயன் கூறு?
குறள் 706:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
கண்ணாடி உள்ளதைக் காட்டுதல்போல் உள்ளத்தில்
உள்ளதைக் காட்டும் முகம்.
குறள் 707:
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
வெறுப்பு விருப்பை முகம்போல காட்டும்
அறிவுமிக்க தொன்றில்லை வேறு.
குறள் 708:
முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
அகத்தில் உள்ள குறிப்பறி வோரோ
முகம்நோக்கி நின்றால்போ தும்.
குறள் 709:
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
குறிப்பறியும் விற்பன்னர் பகையா? உறவா?
குறிப்பறிவார் கண்களைப் பார்த்து.
குறள் 710:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற.
நுண்ணறி வாளருக்கோ உள்ளத்தை நன்களக்க
கண்கள் அளவுகோலாம் கூறு.
0 Comments:
Post a Comment
<< Home