Sunday, January 10, 2021

73 அவையஞ்சாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

73 அவையஞ்சாமை

குறள் 721:

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.


சொற்பொழி வாற்றலுள்ளோர் பேச்சில் தனைமறந்தும்

குற்றமற்ற சொல்சொல்லார் கூறு.

குறள் 722:

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.


கற்றார்முன் கற்றவற்றை ஏற்குமாறு சொல்பவர்

கற்றாரை விஞ்சுபவ ராம்.

குறள் 723:

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத் தஞ்சா தவர்.


போர்க்களத்திற் கஞ்சார் பலராவார்! பேச்சரங்கில் 

பேசுவதற் கஞ்சார் சிலர்.

குறள் 724:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.


கற்றவர்முன் கற்றதைச் சொல்லியும் மேற்கொண்டு 

கற்றறிந்து கொள்தலும் நன்று.

குறள் 725:

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.


அவையிலே கேள்வியைச் சந்திக்கும் ஆற்றலுக்குத்

தர்க்கநூல் கற்பது நன்று.

குறள் 726:

வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.


போர்க்களத்தில் அஞ்சுவோர்க்கு வாளேன்? அவையஞ்சும்

பேர்களுக்கு நூலறிவு ஏன்?

குறள் 727:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்

தஞ்சு மவன்கற்ற நூல்.


பகைக்கஞ்சும் கோழையின் கைவாளும்

கற்றோர்

அவைக்கஞ்சும் நூலறிவும் ஒன்று.

குறள் 728:

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.


நல்லவையில் சொல்லத் திறனற்றோர்

கற்றிருந்தும்

எந்தப் பயனுமில்லை சொல்.

குறள் 729:

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.


கற்றிருந்தும் நல்லார்முன் பேசப் பயப்படுவோர்

கற்காத மானிடர்க்கும் கீழ்.

குறள் 730:

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

கற்றும் அவைக்கேற்பச் சொல்லாதோர் வாழ்ந்திருந்தும்

சற்றுமிங்கே வாழாதார்க் கொப்பு.















































0 Comments:

Post a Comment

<< Home