மழை பேசுகின்றேன்!
மழையே வராதா!முணுமுணுப்பைக் கேட்டேன்!
அழைத்த விருந்தாளி யாக -- மழைபெய்தேன்!
தாழ்ந்த பகுதிகளில் வெள்ளமாக ஓடினேன்!
காழ்ப்போ எனக்கில்லை! கூறு.
அணைகள் நிரம்பின! ஆறுகளில் வெள்ளம்!
மனைகளில் ஓடி வெறுப்புக்குள் ளானேன்!
மனங்குமுற மக்களோ சாடித் தவிக்க
தினமும் திகைக்கின்றேன்! செப்பு.
வயல்களில் எல்லாம் பயிர்கள் அழிய
துயரத்தின் எல்லையில் மக்கள் -- அயர்ந்தார்!
தவித்துத் துடிக்கின்றார்!நானென்ன செய்வேன்?
அவிழ்த்திடும் மேகமே ! சொல்.
வங்கக் கடலில் புயல்சின்னம் வந்துவிட்டால்
பொங்கிவரும் நானோ பொழிகின்றேன் -- தங்குமடம்
இல்லாமல் எங்கெங்கோ ஓடி ஒளிகின்றேன்!
தொல்லைகள் என்கின்றார் ! ஏன்?
கால்வாய்ப் பகுதிகளை வீடுகளை மாற்றிவிட்டால்
காலூன்ற நானெங்கே செல்வது?-- நாளும்
தெருக்களைத் தோண்டித்தான் பள்ளமாக்கிப் போட்டால்
பெருக்கெடுத்துத் தேங்குகின்றேன் நான்.
மழைநீர் வடிவதற்கு ஏற்றாற்போல் சாலை
நிலையிருக்க வேண்டுமிங்கே!ஆனால்--மழைவந்தால்
பார்க்கலாம் என்றேதான் மெத்தனமாய் நின்றிருந்தால்
யாரைப் பழிப்பதுநான்? சொல்.
செய்யும் பணியைத் திருத்தமாய்ச் செய்யாமல்
தொய்வாய் அரைகுறையாய் செய்துவிட்டு-- இவ்வுலகை
வாழவைக்க நான்வரும் போதென்னைச் சாடுவது
கோழைத் தனமென்பேன்! நான்.
-- மதுரை பாபாராஜ்
1 Comments:
தீபாவளி வாழ்த்துக்கள் !
12:26 PM
Post a Comment
<< Home