மழலையாக மாறேனோ ?
மழலையாக இருந்தேதான்
மங்கையாக வளர்ந்துவந்தேன்!
வளமாக வாழ்வதற்கே
வரிசையாகக் கனவுகண்டேன்!
கனவுகண்ட பருவத்தில்
கைப்பிடித்த நாயகனோ
மணக்கோலம் தந்துவிட்டான்!
மகிழ்ச்சியிலே திளைத்திருந்தேன்!
ஓராண்டு ஈராண்டு
உருப்படியாய் ஓடியது!
சீராகத் தேரோடும்
சிறப்புகளை நினைத்திருந்தேன்!
கணவனுக்கு அடிமையாகக்
காரிகைநான் இருந்தநேரம்
கணவனிங்கே குடிவெறிக்கு
கரைமீறி அடிமையானேன்!
குடிகாரக் கணவனிடம்
கொடியின்றிப் போராட்டம்!
அடிவாங்கி உதைவாங்கி
அலைகின்ற அலங்கோலம் !
வேதனையும் சோதனையும்
வெறியாட்டம் போடுகின்ற
பாதகமே வாழ்க்கையானால்
பாரினிலே இன்பமேது?
இப்படித்தான் சீரழிதல்
இவ்வுலக வழ்க்கைஎன்றால்
அப்படியே மழலையாக
அம்மாநான் மாறேனோ?
மாறிவிட்டால் உன்மடியில்
மாசற்ற மழலையாவேன்!
ஊறிவரும் தாலாட்டில்
உலகத்தை நான்மறப்பேன்!
===========================================
கவிதை உறவு இதழில் வெளிவந்த கவிதை
============================================
0 Comments:
Post a Comment
<< Home