Wednesday, December 24, 2008

கால மாற்றம்

சித்திரப் பதுமை போலச்
சிறுமியாய் இருந்த நாளில்
தத்தியே நடைப யின்றாள் !
தளிர்மக ளுடனே நானும்
நத்தையாய் ஊர்ந்து சென்றேன்!
நாளெலாம் இன்பங் கண்டேன்!
முத்திரைப் பெட்ட கத்தை
முழுவதும் காத்து வந்தேன்!


தேன்மலர்ப் பருவந் தன்னில்
திளைத்திடும் மகளோ இன்று
மானெனத் துள்ளு கின்றாள்!
மலைப்புடன் என்னைப் பார்த்து
ஊன்றிடும் வலுவி ழந்து
உன்நடை தளர்ந்த தாலே
நானுமென் தோழி மட்டும்
நகர்வலம் செல்வோ மென்றாள்!

அன்றிவள் எண்ணி எண்ணி
அடிகளை வைத்த போது
மனத்தினில் ரசித்துப் பார்த்தேன்!
மயங்கியே நடந்து சென்றேன்!
இன்றிவள் நடையில் வேகம்
இணைந்ததும் என்னைத் தானே
அன்புடன் தவிர்த்து விட்டாள்!
அன்னைநான் பொறுத்துக் கொண்டேன்!

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home