Saturday, December 13, 2008

முத்தான மூவர்

தாயினிற் சிறந்த கோயில்
தரணியில் இல்லை என்றார்!
கோயிலைத் தேடித் தேடிக்
கும்பிடச் செல்ல வேண்டாம்!
தாய்மனம் நோகா வண்ணம்
தளிர்களின் கடமை இங்கே
தூய்மையாய் இருந்தால் போதும்!
தொழுததின் பயனைக் காண்போம்!

தந்தையின் சொல்லை விஞ்சும்
தத்துவம் இல்லை என்றார்!
மந்தையில் ஆட்டைப் போல
மற்றவர் பின்னால் சென்று
சந்தையில் விலைக்கு மாறும்
சரக்கென மாற வேண்டாம்!
தந்தையின் சொல்வி ளக்கு
தந்திடும் ஒளியில் செல்வோம்!

இருவருக்கு அடுத்த தாக
எவரினி முதன்மை என்றால்
அருந்தமிழ் அகரஞ் சொல்லி
அகத்தினில் அறிவை ஊட்டி
இருளினை அகற்றிக் காட்டும்
இணையிலா ஆசான் என்பேன்!
இருகரம் கூப்பி நெஞ்சில்
இசைவுடன் அவரைப் போற்று!

மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home