Wednesday, December 24, 2008

பாட்டுக்கு வைக்கின்றார் வேட்டு

ஆபாசப் பாடல்கள் சமுதாய மேடையிலே
அரங்கேற்றம் காணுகின்ற காலம் -- இது
பாட்டுக்குப் பொல்லாத காலம் !

காசுக்குப் பாட்டெழுதிக் காமத்தைத் தூண்டுகின்ற
களங்கத்தைக் கவிஞர்கள் சுமந்தார் -- இவர்கள்
மாசுக்கே மாசாக அமைந்தார்!

இன்றுவரும் பாடல்கள் குடும்பத்தார் எல்லோரும்
இணைந்தேதான் கேட்பதற்கே இல்லை -- கொச்சைச்
சொற்களின் அணிவகுப்பே எல்லை!

தேசத்தின் வேர்களுக்கு வெந்நீரை ஊற்றுகின்ற
பாதகமே இவர்களது செய்கை -- வெட்கித்
தலிகுனிய வைக்கிறது நம்மை!

எதிர்கால இளைஞர்கள் நெஞ்சத்தில் நஞ்சுதனைப்
பாய்ச்சித்தான் களிக்கின்றார் இவர்கள் -- நல்ல
முன்னேற்றப் பாதைக்கே சுவர்கள்!

மக்கள்தான் விரும்புகின்றார் என்றேதான் சொல்கின்றார் !
மக்களென்ன ஊர்வலமா வந்தார்?-- இல்லை
இவர்களிடம் கோரிக்கையா தந்தார்?

முக்கல்கள் முனகல்கள் வக்கிரங்கள் இவையெல்லாம்
முழுமூச்சாய்ப் பாடலாக மாறும் -- இவையோ
சாக்கடைக்குப் போட்டியாக ஊறும்!

பெண்ணினத்தை இழிவாக்கி போதைக்குப் பொருளாக்கி
முற்போக்குக் கவிஞரென்றே சொல்வார் -- பண்பின்
முதுகெலும்பை ஒடித்தேதான் கொல்வார்!


வெண்பாக்கள் விருத்தங்கள் திரைப்படத்தில் எழுதென்று
வேகமாகச் சொல்லவில்லை நாங்கள் -- அரை
வேக்காட்டில் புலம்பவில்லை நாங்கள்!

இலக்கியத்தின் நளினத்தைத் திரைப்படத்தில் இழையவிட்ட
கண்ணதாசன் திறமையினைக் காட்டு -- இல்லை
பாட்டுக்கே வைக்காதே வேட்டு!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home