Sunday, November 15, 2009

வேலையாள் அல்ல!உதவும் கரங்கள்!

=======================================
நம்முடைய வீட்டுக்கு நம்முடைய வேலைக்குக்
கண்ணுங் கருத்துமாய்,அக்கறையாய்-- அன்றாடம்
வந்தே உதவிசெய்யும் பெண்களின் மனத்தைப்
புண்படுத்திப் பார்த்தல் இழிவு.

வேலையாள் என்றே அழைப்பதை விட்டுவிட்டு
நாளும் உதவியாள் என்றே அழைக்கவேண்டும்!
கோளின் சுழற்சி விதியிலே சிக்கிவிட்டார்!
கோலத்தை ஏந்திவிட்டார் கூறு.

நம்மால் வீட்டுவேலை செய்ய முடியவில்லை!
அன்பாக வந்தே துணைக்கரம் நீட்டுகின்றார்!
அன்புடனே நாமும் பகிர்ந்துண்ண வேண்டுமிங்கே!
பண்பாடு காக்கவேண்டும் பார்.

வறுமையால் வாடுகின்றார்! அந்த நிலையை
நறுக்கென்று சாதகமாய் மாற்றியே நாமும்
கடுமையாய்ப் பேசுதல் கூடாது! நெஞ்சே!
வடுக்களைக் கூட்டாதே இங்கு.

அவர்களுக்கும் வீடுண்டு! வாசலுண்டு! பெற்ற
குழந்தைகள் காத்திருக்கும் கோலமுண்டு!பாராய்!
உலவும் உணர்ச்சிகள் எல்லாம் பொதுதான்!
உலக நடப்பை உணர்.

ஒருநாள் அவர்கள் வரவில்லை என்றால்
ஒருநாள், யுகமாக மாறிவிட வீடே
ஒருநிலை இன்றித் தலைகீழாய் மாறும்!
பெருந்தன்மை காட்டுதல் பண்பு.

== மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home