இல்லறத்தில் ராகபேதம்!
=========================
கணவன் மனைவியையோ, அந்த மனைவி
கணவனையோ நாளும் அடிமைப் படுத்தும்
மனப்போக்கு நல்லதல்ல!நிம்மதி தேய்ந்து
கணைகளாய் மாறிடுவார்!காண்.
இருவரும் விட்டுக் கொடுக்கும் விவேகம்
ஒருங்கிணைந்தால் இல்லறத்தில் என்றும் மகிழ்ச்சி
தருவாய் வளரும்!தழைக்கும்!நிலைக்கும்!
ஒருமைதான் இன்பம்!உணர்.
மரியாதை காட்டுகின்ற பண்பினை இங்கே
சரிவர வாழ்வில் புரிந்துகொண்டு வாழ்ந்தால்
சரியாது ! இல்லறம் கோணாதே!இந்தப்
புரிதல் உணர்வே தளம்.
எடுத்ததற் கெல்லாம் இடிமுழக்கம் என்றால்
கடுகடுத்த கோபத்தில் சொற்கள் நெருப்பாய்
அடுத்தடுத்துப் பாயும்!எவரெனினும் தாக்கும்!
வடுக்களும் ஆறா துணர்.
மற்றவர்கள் முன்னே மனைவி கணவனையும்
மற்றவர்கள் முன்னே கணவன் மனைவியையும்
மட்டப் படுத்தியே சீண்டுதல் கூடாது!
எப்பொழுதும் பண்பினைப் பேண்.
கணவனும் அன்புடன் பேசவேண்டும்!நல்ல
குணவதியும் பின்பற்றிப் பேசவேண்டும்!தாளம்
மனம்போன போக்கிலே போகுமென்றால் ராகம்
தினமும் பேதமுடன் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home