மதுரை இளந்தோப்பு - விளாங்குடி
தோழர் பொன்மனப் பொன்னையா துன்னக்காரர்!( கைத்தையல் பொறி)
1962-- 1994
பொதுவுடைமைக் கொள்கையில் வாழ்ந்தவர்! இங்கே
பொதுவுடைமைக் கட்சியின் போராட்டம் என்றால்
அதில்சென்று பங்கெடுத்து தானும் சிறையின்
சுடுகளம் கண்டவரை வாழ்த்து.
எங்கள் குடும்பத்தில் எல்லா உடைகளையும்
நன்கு அளவெடுத்துத் தைப்பவர்! கைப்பொறியை
கொண்டுவந்து வீட்டில் அமர்ந்து முடித்திடுவார்!
தன்கடமை ஆற்றலே வாழ்வு.
கைப்பொறியை முன்வைத்து நூல்செருகி உட்கார்ந்து
வெட்டிய துண்டுத் துணிகளை ஆடையாக்க
அங்கே வலக்கை உருளையைச் சுற்றுசுற்ற
தன்இடக்கை ஐந்து விரல்கள் துணிமீது
நன்கு அழுத்தியே தைப்பார்! கவனமுடன்!
நின்றுநான் பார்ப்பேன் வியந்து.
எனக்கு முதன்முதலில் நீள்கால்சட்டை
தைத்தார்!
மனமுவந் தணிந்தேதான் சென்றேன் மகிழ்ந்து!
எனது மனைவி குழந்தைகள் அக்கா
மகன்களென மொத்தக் குடும்பமும் தைத்து
அகங்குளிர்ந்த காட்சி உண்டு.
விழாக்காலம் வந்தால் இவர்வந்து தைப்பார்!
விழாக்கோலம் வீட்டில் தெரியும்! இவரும்
சளைக்காமல் தைத்தே அடுக்குவார் அங்கே!
எளிமை, பணிவே உரு.
விளாங்குடி சென்றார் ! எப்படியோ வந்தே
தளராமல் எல்லா துணிகளையும் தைப்பார்!
கலங்கும் வறுமை இருந்தாலும் என்றும்
நிலைகளைச் சொல்லா தவர்.
ஒருமுறை தேடி விளாங்குடி சென்றேன்!
கலங்கினேன் அந்தக் குடிசையைக் கண்டு!
முகத்தில் சிரிப்புடன் வாவென்றார்! எண்ணி
வியந்தேன் திரும்பினேன் நொந்து.
அனைவருக்கும் ஆடைகளைத் தைத்துக் கொடுத்து
மனைதோறும் இன்பத்தைத் தூவும் இவரின்
மனையோ வறுமை உலவும் குடிசைதான்!
மனையிலே நாள்தோறும் வாழ்ந்தார்
மகிழ்ந்து!
இணையற்ற தோழரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home