பாலா சங்கச்சுரங்கம்
ஏற்பாடு:
ரோஜா முத்தையா நூலகம்-- களம் அமைப்பு, திருச்சி
நிகழ்ச்சி:
கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!
இரண்டாம் பத்து-- ஐந்தாம் உரை
நடுவு நின்ற நல்நெஞ்சினோர்!
12.09.20
பாலா உரைக்கு வாழ்த்து!
உழவரின் ஊரில் இரண்டுமாடு பூட்டி
நுகத்தின் நடுவில் பகலாணி போல
நடுவுநிலை கொண்டு நல்நெஞ்சம் கொண்டே
உறுத்தலின்றி நாளும் வணிகத்தைச் செய்தார்!
நடுக்கமின்றி தானென்று செப்பு.
பட்டினப் பாலை தரும்செய்திப் பின்னணியில்
அற்புதமாய்த் தன்கருத்தை வைத்தே உரையாற்ற
கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்த பாலாவை வாழ்த்துவோம்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு
வெறுப்பில் லாமல் பெருந்தன்மை உள்ள
பொறுப்பு இலக்கியம் சங்கநூல்கள் என்றார்!
நடுவு நிலைமையின் பண்புகளைச் சொல்லி
விறுவிறுப் பாக விளக்கம் அளித்தார்!
நறுந்தமிழ் பாலாவை வாழ்த்து.
நல்லாசிரியர்! மதுரைக்காஞ்சி,761-767
தொல்லாணை நல்லா சிரியரை நாடியே
நல்லறம் செய்வதற்குக் கற்றுக்கொள் முன்னோர்போல்
உள்ளம்கொள் என்றே நெடுஞ்செழியன்
மன்னனைக்
கள்ளமின்றித் தூண்டுகின்ற பா.
நல்லா சிரியரெனும் சொல்லாட்சி சங்ககாலத்
தொன்மை இலக்கியத்தில் உள்ளதைக் கூறினார்!
நல்லா சிரியர் விருது தருவதற்கு
உள்ளதோர் சான்றாகும் இஃது.
பழங்குடி மக்களின் தீர்ப்பு வழக்கம்!
நட்டநடு உச்சிவேளை சூரியன் வந்தவுடன்
நட்டகுத்த லாகத்தான் தீர்ப்புரைப்போர்
வந்துநிற்பார்!
இப்பக்கம் அப்பக்கம் சாயாமல் தீர்ப்பளிப்பார்!
சற்றும் சரியாத தீர்ப்பு.
நடுவுநிலைமை என்ற குறளதி காரம்
எடுத்துரைக்கும் நற்கருத்தைச் சொல்லி
விளக்கி
நடுநிலைமை போற்றும் நல்நெஞ்சின் சான்றை
எடுத்துரைத்த பாலாவை வாழ்த்து.
-------------------------------------------------------------
சுரங்கத்தில் இருந்து அரங்கத்திற்கு
--------------------------------------------------------------
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் !
( பரிபாடல்)
----------------------------------------------------------------
கடவுளைக் கேள்விகேட்ட பாடலைச் சொல்லி
கடல்கடைந்த போது அமுதத்தை இக்கை
நடுநிலை தப்பியே தேவர்க்கும், நஞ்சை
அசுரர்க்கும் தந்த விதத்தைச் சாடி
நறுந்தமிழை வாழ்த்தினார் வாழ்த்து.
---------------------------------------------------------------
இந்த உரை சுரேஷ் போன்ற நடுவு நின்ற நல் நெஞ்சினோர்க்கு காணிக்கை.
லாட்டரி சீட்டு விற்பவர்
நேர்மைக்குச் சான்றாக வாழும் சுரேஷுக்கு
பாலா உரைதன்னைக் காணிக்கை யாக்கினார்!
ஞாலத்தில் இன்னும் மழைபெய்ய நல்லவர்கள்
வாழ்கின்ற காரணந்தான் சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home