Friday, February 05, 2021

127 அவர்வயின் விதும்பல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

127 அவர்வயின் விதும்பல்

( காதலரோடு சேர மனம் விரைதல்)

குறள் 1261:

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.


வருவார் எனவே வழிபார்த்து விழியின்

ஒளியிழக்க நாளெண்ணி கையின் விரல்கள்

சுவர்தொட்டுத்  தேய்ந்தன காண்.

குறள் 1262:

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து.


தோழி! பிரிவால் இன்றவரை நான்மறந்தால்

தோளின்  வளைசரியும் வீழ்ந்து.

குறள் 1263:

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன்.


துணிவுடன் சென்றுவிட்டார்! வெற்றி கனிய

வருவதை நம்புகின்றேன் வாழ்ந்து.

குறள் 1264:

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் நெஞ்சு.


பிரிந்தவர் இங்கே வருவதை நெஞ்சம்

மரமேறிப் பார்க்குதடி பார்.

குறள் 1265:

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்குமென் மென்தோள் பசப்பு.


அன்பரைக் கண்ணாரக் கண்டதும் என்பசலை

வந்தவழி நீங்கிவிடும் சென்று.

குறள் 1266:

வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.


அன்பர் வருவார் எனைநாடி! இன்புறுவேன் 

துன்பமெல்லாம் நீங்கிடத் தான்.

குறள் 1267:

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்ணன்ன கேளிர் வரின்.


அன்பரைக் கண்டதும் ஊடுவேனோ? 

கூடுவேனோ?

அன்றித்  தழுவுவேனோ? சொல்.

குறள் 1268:

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.


அரசனுக்கு வெற்றி கிடைக்கட்டும்! வீட்டில்

கலப்பேன் விருந்தில் திளைத்து.

குறள் 1269:

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.


தொலைதூரம்  சென்றவரை எண்ணியேங்கும்  மங்கைக்(கு)

ஒருநாள் பலநாள்போல் தான்.

குறள் 1270:

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால்.


பிரிந்தவரை எண்ணி மனமுடைந்தால் வந்தே

அணைத்தென்ன? ஆறுதல்தான் ஏன்?


























0 Comments:

Post a Comment

<< Home