128 குறிப்பறிவுறுத்தல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!
128 குறிப்பறிவுறுத்தல்
(ஒருவர்க்கொருவர் குறிப்பு அறிவுறுத்தல்)
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
சொல்ல மறைத்தாலும் உன்மைவிழி
சொல்கின்ற
செய்திக் குறிப்பொன்றிங் குண்டு.
குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
கண்ணழகும் மூங்கிலன்ன தோள்களும்
கொண்டவளின்
பெண்மை அழகே உயர்வு.
குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.
மணிகளுக் குள்ளிருக்கும் நூல்போல மாதின்
மணியழகில் உண்டு குறிப்பு.
குறள் 1274:
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
அரும்புக்குள் உள்ள மணம்போல மாதின்
சிரிப்பில் குறிப்பொன் றுண்டு.
குறள் 1275:
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.
அன்பரசி கள்ளக் குறிப்பில் மருந்துண்டு
என்காதல் நோய்தீரத் தான்.
குறள் 1276:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
அன்பர் தழுவுகின்ற அன்பில் பிரிகின்ற
எண்ணக் குறிப்பொன் றுண்டு.
குறள் 1277:
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
குளிர்ந்த துறையன்பர் நம்மைப் பிரிவார்,
அளிப்பார் துயரென் றுணர்ந்து வளையல்
கழன்றதோ வீழ்ந்திங்கு சாற்று.
குறள் 1278:
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
நேற்றுதான் அன்பர் பிரிந்துசென்றார்! பலநாள்கள்
ஆனதுபோல் இந்தப் பசலை படர்ந்ததே!
ஏனோ கொடுமை எனக்கு?
குறள் 1279:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
அன்பர் பிரிந்தால் வளைநழுவும் கைபார்த்தாள்!
மங்கி மெலியுமென்று தோள்பார்த்தாள்! மீறினால்
பின்தொடரும் கால்பார்த்தாள் நின்று.
குறள் 1280:
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
கண்களால் தூதுவிட்டுக் காதலன் போகவேண்டாம்
என்றுரைத்தல் பெண்மைக்கு பெண்மையைச் சேர்க்கின்ற
தண்ணழகுச் சித்திரந் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home