Saturday, February 06, 2021

129 புணர்ச்சி விதும்பல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

129 புணர்ச்சி விதும்பல்

( தலைவனும் தலைவியும் புணர விரைதல்)

குறள் 1281:

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.


நினைத்தாலும் பார்த்தாலும் காதலோ இன்பம்!

இவையிரண்டும் கள்ளிலில்லை காண்

குறள் 1282:

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின்.


பனையளவு காதலன்பு ஊறுகின்ற  போது

தினையளவும் ஊடல் தவிர்.

குறள் 1283:

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்.


என்னை அவமதித்துச் சீண்டினாலும் கண்களோ

அன்பரைத் தேடியோடும் செப்பு.

குறள் 1284:

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதென் னெஞ்சு.


ஊடுகின்ற நோக்கமுடன் நான்சென்றேன்! நெஞ்சமோ

கூடலுக்குச் சென்றது பார்.

குறள் 1285:

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்

பழிகாணேன் கண்ட இடத்து.


மைதீட்டும் நேரத்தில் கோல்தெரி யாததுபோல்

காதலரைக் காணுகின்ற நேரம் அவர்குறைகள்

மாதுணர மாட்டாள் மறந்து.

குறள் 1286:

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை.


காதலரைக் கண்டால் தவறுகளைக் காணமாட்டேன்!

காணாத போதுகாண்பேன் தவறு.

குறள் 1287:

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து.


வெள்ளம் இழுத்தாலும் நீந்துதல்போல் வெற்றியில்லை

என்றாலும் ஊடுவதேன் சாற்று?

குறள் 1288:

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.


அன்பரே! துன்பத்தைத் தந்தாலும் கள்ளுண்டோர்

கள்விரும்பு தல்போலுன் மார்பு.

குறள் 1289:

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்.


காதலின்பம் பூவினும் மென்மையே! மென்மையுடன்

காதலை ஆள்வோர் சிலர்.

குறள் 1290:

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று.


கண்களால் ஊடியவள் என்னுடன் கூடியதோ

என்னைவிட வேகமாய் வந்து.


























0 Comments:

Post a Comment

<< Home