துளிகள்
வாழ்க்கை
வாழ்க்கையை வில்போல் வளைக்க நினைத்தேதான்
பாழ்பட்டுப் போகாதே பாரினிலே -- வாழ்க்கை
அமைவதுபோல் வாழ வளைந்துகொடு ! நெஞ்சில்
சுமையின்றி வாழ்தல் சுகம்.
பசி
சாதம் அழைக்கிறது! சாம்பார் மணக்கிறது!
நாதம் இசைக்கிறது நாவிங்கே -- தூதுவிட்டுத்
துள்ளும் பசியடக்கத் தோகை மயிலாளே !
அள்ளி அமுதத்தைப் போடு.
மலை நகர்ந்தது
கோலத் திருநிலவு கொள்ளைச் சுடர்சிந்தி
நீலத் திரைவிரிப்பில் நித்திலமாய் ஊர்ந்ததடி
சோலை சிலிர்த்ததடி! சொக்கும் அழகினிலே
மாலை நகர்ந்ததடி மாது.
நகரப் பேருந்து நெரிசல்
முண்டி நெருக்கியே மூச்சுத் திணறியே
நொண்டி அடித்து நுழைந்து -- வண்டியில்
நாளும் பயணம் நகர்கின்ற கோலத்தில்
காலம் கரைகிறது காண்.
மதுவை விலக்கு
நாட்டின் அவமானம் நாட்டில் மதுக்கடைகள் !
கேட்டை விளைவிக்கும்! கேலிப் பொருளாக்கும்!
வீட்டை இருளாக்கும்! வேதனை ஊற்றெடுக்கும்!
வேட்கை மனமே விலக்கு.
துப்பாதே மானிடனே
கண்ட இடங்களில் காறியே துப்புகின்றார்!
என்னப் பழக்கமோ இப்பழக்கம் -- எண்ணற்ற
தொற்றுநோயைக் கூட்டிவரும்! துப்பாதே மானிடனே!
குற்றத்தைச் செய்யலாமா? கூறு.
மதுரை பாபாராஜ்
1997
0 Comments:
Post a Comment
<< Home