Saturday, December 13, 2008

உவகையோ கானல்தான் !

ஒருகோழிக் குஞ்சங்கு மகிழ்ச்சி யோடு
ஓடிவந்து இரைதேட வந்த போது
பருந்தொன்று காலாலே அதனைக் கவ்வி
பறந்ததம்மா! என்னுள்ளம் துடித்ததம்மா !

தெருவோரம் நாயொன்று வாலை ஆட்டித்
துள்ளித்தான் குதித்ததம்மா !அதனைக் கண்ட
ஒருசிறுவன் கல்லெடுத்து அடித்த போது
ஓலமிட்டு ஓடியதால் கலங்கி நின்றேன்!

வளைவிட்டு எலியொன்று வந்த போது
வாலாட்டும் பூனையொன்று அதைப்பி டித்து
திளைத்ததம்மா இன்பத்தில்!எலியோ அங்கே
திணறியதும் கண்களைநான் மூடிக் கொண்டேன்!

இளைப்பாறத் தவளைதான் குளத்தை விட்டே
எழிலாகக் கரைமீது அமர்ந்த போது
வளைந்தாடும் பாம்பொன்று அதைவி ழுங்கி
மகிழ்ந்ததம்மா ! அதைக்கண்டே குழம்பி நின்றேன்!

இன்பமிங்கே தன்சிறகை விரிக்கு முன்பே
இன்னலென்னும் கருநாகம் சீறு தம்மா !
கண்மூடித் திறப்பதற்குள் உவகை இங்கே
கானலாகும் நிகழ்ச்சிகளைக் கண்டு நின்றேன்!

மதுரை பாபாராஜ்
1981

0 Comments:

Post a Comment

<< Home