குறுந்தொகை 101
குறுந்தொகை
பாடல் 101
பாடலாசிரியர் :
பரூஉ மோவாய்ப் பதுமனார்
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
--------------------------------------------------------------------------------------
ஒருபுறம் மண்ணக விண்ணக வாழ்வும்
ஒருபுறம் எங்களது இல்லற வாழ்வும்
இருநிலை வைத்தேதான் ஆராய்ந்து பார்த்தால்
இவளுடன் வாழ்கின்ற வாழ்வே சிறப்பாய்
இருப்பதைக் காட்டும்! இவளோ அழகி,
செழுமை மிளிர்கின்ற மேனியும் பூப்போல்
பருகத் துடிக்கும் விழிகளும் கொண்டு
பருவச் சிலைபோல் தவழ்பவள் தோளைத்
தழுவித் தழுவியே மெய்மறக்கும் நாளே
உலகிலே நன்னாள் எனக்கு.

0 Comments:
Post a Comment
<< Home