Sunday, March 29, 2026

குறுந்தொகை 34-35

 குறுந்தொகை 34-35

பாடல் 34

பாடியவர்:கொல்லிக் கண்ணனார்


ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்

தமியர் உறங்கும் கௌவை யின்றாய்

இனியது கேட்டின் புறுகவிவ் வூரே

முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு

அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்

குட்டுவன் மாந்தை யன்னவெம்

குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.

------------------------------------------------------------------------------------------------------

தோழி! எனது தலைவன் அவனேதான்!

ஊழிபோல் கோபிப்பேன், ஓடிவந்து நிற்பான்!

ஊடி மறுப்பேன்! எனைத்தேடி

வந்திடுவான்!

ஊரோ அவனை வெறுக்காமல் என்னைத்தான்

ஊதிப் பழிக்க அவனோ மகிழ்கிறான்!

மாதே! வயலில் குருகினங்கள் மேய்வதைக்

கூவி விரட்டும் ஒலிகேட்டே அஞ்சிஓடும்!

காட்சி நிறைந்த கரந்தைநகர் பேரழகும்  

காதிலாடும் பொன்குழையும் நெற்றிப் பொலிவுமுள்ள

தோகை எனக்குரிய அன்பன் அவன்தானே!

ஏற்பேன் தலைவனைத்தான்  இங்கு.


குறுந்தொகை 35


நாணமற்ற கண்கள்


பாடியவர் : கழார்க்கீரன் எயிற்றி


பாடல்


நாண்இல மன்ற,எம் கண்ணே- நாள்நேர்பு,

சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப் பன்ன

கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ

நுண்ணுறை அழிதுளி தலைஇய

தண்வரல்  வாடையும்,பிரிந்திசினோர்க்கு அழலே.

------------------------------------------------------------------------------------------

தோழி! இத்தனைநாள் நானோ பிரிந்திருப்பேன்!

சேயிழையே! என்றார் தலைவர்! கண்களும்

போய்வர இங்கே உடன்பட்டே நின்றன!

தோழி! சினைப்பட்ட பச்சைவகைப் பாம்பினது

சூலின் முதிர்ச்சிபோல் கன்னல் பொதியவிழ்ந்தே

வீழும் மலர்போல வானம் பொழிகின்ற

வாடைப் பருவத்தில் வாராமல் வாழ்கின்றார்!

ஏகமாய் இந்தப் பிரிவின் துயரத்தில்

வேகமாகக் கண்கள் அழுகிறதே நாணமின்றி!

நாடறிய  துன்பத்தில் நான்.

0 Comments:

Post a Comment

<< Home