குறுந்தொகை 39-45
குறுந்தொகை 39-45
தலைப்பு : வழிஎண்ணி அச்சம்
பாடியவர்: ஔவையார்
பாடல் 39
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
----------------------------------------------------------------------------------------------
தோழி! அன்பரெந்தன் நெஞ்சைத் தழுவித்தான்
தூவிய தேன்நிகர்த்த சொற்களைப் பேசுவார்!
சேயிழை நானங்கே ஊடுவேன்! பொய்க்கோப
ஓவியத்தை அன்பர் முகமேந்தும்! நம்தலைவர்
போயிருக்கும் பாதையோ காற்றடிக்கும் நேரத்தில்
வாகைக்காய் ஆடி ஒலியெழுப்பும்! மாமலைகள்
ஊடறுக்கும் பாலை நிலமாகும் தோழியே!
வேதனைத் தீயிலே நான்.
குறுந்தொகை 40
தலைப்பு : இணைந்த இதயங்கள்
பாடியவர்: செம்புலப் பெயனீரார்
பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
----------------------------------------------------------------------------------------------
அன்பரசி! உன்தாயும் என்தாயும் எவ்வகையில்
இங்கே உறவினர்? அவ்வாறே நம்தந்தை
என்ன முறையில் உறவினர்கள்? நம்மிதயம்
அன்பில் கலந்ததும் எப்படியோ? முன்பின்னே
இம்மண்ணில் நாமிருவர் சந்தித்த நாளென்றோ?
செம்மண்ணில் நீர்கலந்தே ஒன்றிய கோலம்போல்
அன்பால் இதயங்கள் நம்மைத்தான் சேர்த்ததுவே!
அன்பே இணைப்பின் உயிர்.
குறுந்தொகை 41
தலைப்பு தனிமையின் வெறுமை!
பாடியவர்: அணிலாடு முன்றிலார்
பாடல் 41
காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.
-----------------------------------------------------------------------------------------
தோழி! அவரெந்தன் பக்கத்தில் உள்ளவரை
சேயிழைநான் கானகத்தின் அண்மையில் உள்ளஇந்த
ஊரினை கோயில் திருவிழா காணுகின்ற
ஊராக எண்ணி மகிழ்ந்திருந்தேன்! நானிங்கே!
பாரேன்! தலைவர் பிரிந்தேதான் சென்றுவிட்டார்!
ஊர்விழா இங்கே முடிந்ததும்
மக்களெல்லாம்
ஊர்நீங்கிச் சென்றபின்பு முற்றத்தில் அங்குமிங்கும்
கால்பதித் தோடும் அணில்கள்தான்! அப்படி
ஊரே வெறுமை அடைந்த
தனிவீடாய்
ஆனதென்றே வேதனையில் வாடித் தவிக்கின்றேன்!
தேனும் கசக்கும் எனக்கு.
பாடல் 42
பாடியவர் கபிலர்
மறக்காமல் சொல்வாயா?
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மா மழைவீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும்தேயுமோ, நின்வயினானே?
தலைவனே! கூடுகின்ற வாய்ப்பின்றிப் போனால்
நிலையான நம்நட்பு தள்ளாட்டம் கண்டு
நிலைகுலைந்து போகுமா? நள்ளிரவில் பெய்யும்
மழையால் மலைக்குகை மீது விழுந்தே
கலகலக்கும் நீர்வீழ்ச்சி யாகி
ஒலிக்கும்
ஒலியோ எனக்கிங்கே கேட்கின்ற நாட்டில்
உழைப்பவனே சொல்வாயா? நீ!
பாடல் 43
பிரிவின் கலக்கம்
பாடியவர்: ஔவையார்
செல்வார் அல்லர்' என்று யான்இகழ்ந் தனனே;
ஒல்வாள் அல்லள்என்று அவர்இகழ்ந் தனரே
ஆயிடை, இருபேர் ஆண்மை செய்தபூசல்
நல்அராக் கதுவி யாங்கு,என்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
----------------------------------------------------------------------------------------------------------------
தோழியே! என்னவர் என்னைப் பிரியமாட்டார்!
சேயிழைநான் எண்ணித்தான் சேர்ந்திருந்தேன்! சொல்லிவிட்டால்
ஆவி துடித்தே உடன்படேன் என்றவரும்
தூவிடும் சோர்வில் இருந்திருப்பார் ! பேராண்மை
காரிகை, தலைவன் இருவருக்குள்
தூண்டிய
ஊடல் ஒருவரை மட்டுமே கவ்வியே
சீறுகின்ற நல்லபாம்பாய் துன்பமோ நெஞ்சிலே
ஊறவைத்தே கலக்கத்தை ஊற்றெடுக்க வைத்ததடி!
பாறைமன நாயகரைப் பார்.
பாடல் 44
தேடக் கூடுமோ?
பாடியவர்: வெள்ளிவீதியார்
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
----------------------------------------------------------------------------------------
அன்பர் வரவில்லை! எண்ணிக் கலங்குகிறேன்!
தன்னிலை விட்டேதான் வீட்டுக்கும் வாசலுக்கும்
அம்மா! நடந்து நடந்தேதான் காலிரண்டில்
பின்னும் வலிதன்னைத் தாங்க முடியவில்லை!
கண்கள் சளைக்காமல் பார்த்தே ஒளியிழந்து
மங்கித்தான் சோர்ந்தன! வானத்து விண்மீன்கள்
எண்ணிக்கை விஞ்சுகின்ற ஆடவர் கூட்டத்தில்
என்னவரை எங்குசென்று தேடுவேன்? சொல்லுங்கள்!
அன்பின் மயக்கம் இது.
பாடல் 45
தலைவியின் உள்ளம்!
பாடியவர் :ஆலங்குடி வங்கனார்
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.
-----------------------------------------------------------------------------------------
காலைப் பொழுதிலே தன்னை அழகுசெய்து
தேரில் இருமணப் பெண்டிரிடம் செல்கின்றான்!
ஊரோ வளங்கொழிக்கும் ஊராம்!
தலைவனுக்கு!
கூடிக் களித்தவன் காலைத் துயிலெழுந்தே
ஆடிக் களைத்து வருகின்றான்! அன்பனின்
ஈடில்லா மைந்தனின் தாயாம் தலைவியோ
வாடி மனம்சுழல இந்த உயர்குடியில்
வாழும் பிறப்போ துயரின் சிகரந்தான்!
வாழ்வின் கடமை உணர்வால் பொறுத்தேதான்
வாழ்கிறேன் நொந்தேதான் நான்.

0 Comments:
Post a Comment
<< Home