Sunday, March 29, 2026

குறுந்தொகை 48-50

 குறுந்தொகை 48-50

பாடல் 48

பாடியவர்:பூங்கணுத்திரையார்


தாதிற் செய்த தண்பனிப் பாவை

காலை வருந்துங் கையா றோம்பென

ஓரை யாயங் கூறக் கேட்டும்

இன்ன பண்பி னினைபெரி துழக்கும்

நன்னுதல் பசலை நீங்க வன்ன

நசையாகு பண்பின் ஒருசொல்

இசையாது கொல்லோ காதலர் தமக்கே

------------------------------------------------------------------------------------------------

தோழிகள் காலையில்  ஓரை விளையாட்டைக்

கூடி விளையாடும் நேரம் தலைவியோ

வாடி அழுதிருந்தாள்! தோழி தலைவியே

பாரடி பூம்பாவை கூட அழுகின்றாள்!

தேற்றினர் ஆனால் தலைவி அழுதிருந்தாள்!

ஏற்றமிகு நெற்றியிலே ஏக்கப் பசலையோ

ஊற்றெடுத்து நிற்பதைச் சொல்லி அன்பனிடம்

ஏக்கத்தைத் தீர்ப்பதற்கே ஆறுதல் சொல்வதற்கு

காற்றாய் வருவாரோ சொல். 


எப்பிறவியும் நீயே!


பாடல் 49


பாடியவர் அம்மூவனார்


அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.

-------------------------------------------------------------------------------------

அணிலுடைய பற்களைப் போலுள்ள முட்கள்

அணிவகுக்கும் முள்ளிச் செடியருகில் நீல

மணிநிறக் காரன்னம் நிற்கும் காட்சி

அணிசெய்யும் நல்ல கடற்கரை நாட்டில்

பணிசெய்யும் அன்பனே! இப்பிறவி சென்று

இனிவரும் எல்லாப் பிறவியிலும் நீயே

கணவனாக, நானே மனைவியாக வாழும்

மணநிலை வேண்டுகின்றேன் நான்.



வாட்டும் ஏக்கம்


பாடல் 50


பாடியவர்:குன்றியனார்


ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்

செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்

துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்

திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்

புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

-------------------------------------------------------------------------------------

ஞாழல் மரத்தின்  கடுகுபோன்ற பூக்களோ

சூழ்ந்த மருதமரச் செம்மல ரோடுதான்

நாளும் கலந்தே அழகான காட்சிதரும்

ஆற்றுத் துறைகொண்ட ஊர்தான் தலைவனூர்!

போற்றும் தலைவனை எண்ணி இளைத்துவிட்டேன்!

ஊற்றெடுக்கும் ஏக்கத்தால் தோள்கள் அழகிழந்தே

 வாடி  வளையல்கள் தோளில் இருந்தேதான் 

ஓடி விழுகிறதே! பார்.

வருவார்!மணமுடிப்பார்!


0 Comments:

Post a Comment

<< Home