குறுந்தொகை 51-55
குறுந்தொகை 51-55
பாடல் 51
பாடியவர்:குன்றியனார்
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.
-----------------------------------------------------------------------------------
தலைவியே! முள்ளிமரப் பூக்கள் உதிர்ந்தே
தரையில் சிதறித்தான நீர்த்துறைகள் தோறும்
பரந்தே கிடக்கும் கடற்கரை நாட்டின்
தலைவனை நின்தாயும் தந்தையும் ஏற்பார்!
தலைவி உனக்கே மணம்புரிய உள்ளார்!
அலைகின்ற ஊராரும் உன்னை இனணைத்தே
மலைத்தேதான் பேசுகின்றார்! காலத்தைப் போக்கும்
தலைவர் வருவார்! உன்னை மணமுடிப்பார் !
சிலையழகி இன்புறுவாய் பார்.
பாடல் 52
கலக்கத்தில் தலைவி
பாடியவர்: பனம்பாரனார்
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.
------------------------------------------------------------------------------
தலைவியே! நீயோ களவொழுக்கத் தாலே
நிலைகுலைந்தே யானை மிதித்த சேறாய்க்
கலங்கித் தவிக்கின்றாய்! கூந்தல் மணத்தில்
நரந்தம்பூ வாசம் இருக்க கவரும்
அழகிலே பற்கள் சிரிப்பிலே தோன்றும்!
கலங்காதே! நானே சிறிது சிறிதாய்
உளந்தன்னைத் தாயிடம் சொல்லிவிட்டேன்! மாதே!
நலமாய் நடக்கும் அனைத்துமே இங்கே!
கவலையே வேண்டாம் காண்.
வாட்டிய வாக்குறுதி!
தோழியின்கூற்று
பாடல் 53
பாடியவர்:கோப்பெருஞ் சோழன்
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே
------------------------------------------------------------------------------
ஊரில் கடல்மணல் மேட்டில் நடந்தது
வேலன் வெறியாட்டு! புன்கம்பூ வெண்மணலில்
கோலம்போல் அங்கே உதிர்ந்திருக்க வெண்பொரி
தூவிச் சிதறிய தோற்றத்தை ஏந்துகின்ற
பூவின மண்மேடு கொண்ட துறையிடத்தே
நேரிழையின் முன்கையைப் பற்றி தலைவியிடம்
ஆர்வமுடன் வாக்குறுதி தந்ததே துன்புறுத்த
வாழ்கிறாள் வந்துமணங் கொள்.
இரைக்கோல்
பாடல் 54
பாடியவர்:மீனெறி தூண்டிலார்
யானே ஈண்டை யேனே; என்நலனே,
ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன்எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு,ஆண்டு
ஒழிந்தன்றே.
---------------------------------------------------------------------
தோழியே! என்னுடல் இங்கிருக்க உள்ளமோ
தாவி, தலைவனிருக்கும் நாட்டில் இருக்கிறது!
யானையோ மூங்கிலை நின்று வளைத்திருக்க
யானை கவண்கல் அடிபட்டே மூங்கிலை
யானையோ விட்டகன்ற கோலம்போல் அன்பனோ
தேன்மகள் வாட விலகிவிட்டான்! பார்த்தாயா!
மீனைப் பிடிக்க மிதக்கும் இரைக்கோல்போல்
நானும் எனதன்பால் பற்ற முனைந்தேனே!
மீனைப் பிடித்து விலகிய மீனைப்போல்
மான்விழி நெஞ்சத்தைத் தான்கவர்ந்து சென்றானே!
மீனிரையை விட்ட இரைக்கோல் போலத்தான்
நானோ தனிமையில் நிற்கிறேன் பாராயோ!
ஏன்வரவில்லை! காரணம் சொல்.
விரைந்து வா தலைவனே!
பாடல் 55
பாடியவர்:நெய்தற் கார்க்கியர்
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.
------------------------------------------------------------------------------------
குளிர்க்காற்று வீசியதால் நீர்த்திவலை பட்டே
தெளிவான உப்பங் கழியின் மணிப்பூ
குவிந்தேதான் கூம்பியதே! இத்தகைய துன்பம்
தெளிக்கின்ற ஊராக உள்ளதே இவ்வூர்!
களிப்புடன் வந்தே மணங்கொள் தலைவா!
தவிக்கும் தலைவி உயிர்நீப்பாள் கேளாய்!
புவியின் சிறைபுறத்தில் நிற்கும் தலைவா!
செவிமடுத்துக் கேட்டாயா நீ?

0 Comments:
Post a Comment
<< Home