குறுந்தொகை 62-69
பாடல் 62
இன்னும் வேண்டும்!
பாடலாசிரியர்:
சிறைக்குடி ஆந்தையார்
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.
---------------------------------------------------------------
தலைமகன் கூற்று!
காந்தள் மலராக மங்கை கைகளாக
ஏந்திழையாள் புன்னகை முல்லை முகையாக
மாந்திய கண்கள் குவளை மலர்களாக
ஏந்திய மேனி மலர்தொடுத்த மாலையாக
சேர்ந்தாள்! தழுவினாள்! இன்பமுடன் தீண்டினாள்!
சேரவேண்டும் மீண்டும்நான் செப்பு.
பாடல் 63
உன்முடிவுதான் என்ன?
தலைவன் கூற்று
பாடலாசிரியர்:உகாய்க்குடிகிழார்
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.
--------------------------------------------------------------
நெஞ்சே! பொருளின்றி வாழ்க்கையே இல்லைதான்!
அன்புடன் மற்றவர்க்கும் ஈய முடியாது!
பஞ்சாய்ப் பறந்து பொருள்தேட எண்ணுகின்றாய்!
என்னவளை விட்டுப் பிரியவும் துணிகின்றாய்!
இந்தப் பயணத்தில் என்மன ஏந்திழையாள்
என்னைத் தொடர்ந்து வருவாளா? இல்லையேல்
என்னைமட்டும் செல்லவைப்பா யோ?
பாடல் 64
பாடலாசிரியர்:
கருவூர்க் கதப்பிள்ளை
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே.
-------------------------------------------------------------
மேய்வதற்கு நாளும் நெடுந்தூரம் செல்கின்ற
ஆவினங்கள் மாலையில் தங்கள் இருப்பிடம்
தாவிவரும்! கன்றுகள் தாய்ப்பசு நோக்கித்தான்
காத்திருக்கும்! கன்றுபோல நானும் இருக்கின்றேன்!
ஏக்கத்தைத் தீர்க்க தலைவன் வரக்காணோம்!
கேட்டிருந்த தோழி, தலைவியே! அப்பசுபோல்
வாட்டத்தைத் தீர்க்க வருவார் உறுதியாக!
சூட்சுமமாய்ச் சொன்னாள் உணர்ந்து.
பாடல் 65
பாடலாசிரியர்: கோவூர்கிழார்
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே.
-----------------------------------------------------------------
கூழாங்கல் உள்ள குழியில் இரலைமான்
தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் பருகியே
மோகமுடன் பெண்மானைப் பார்த்தே விளையாடும்
கார்காலம் வந்ததே! உன்தலைவன் வந்தாரா?
ஆர்வமுடன் காத்திருந்தே நொந்தாயா? என்றென்னைப்
பார்த்தே கேட்கிறது தோழியே! என்செய்வேன்?
கார்வந்தும் காணவில்லை யே!
--------------------------------------------------------
பொறுத்திரு
பாடல் 66 :
பாடலாசிரியர்:கோவர்த்தனார்
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.
-----------------------------------------------------------
கார்காலம் வந்தும் தலைவன் வரவில்லை!
பார்த்தாயா தோழி! பாதகரின் தீச்செயலை!
நேரிழையே! அன்புத் தலைவியே! கார்கால
ஊர்வலம் இன்னும் தொடங்கவில்லை! கொன்றைப்பூ
காரென் றறியாமல் பூத்ததால் என்சொல்ல?
தாரணிந்தோன் சென்றான் மலைப்பாதை தன்னிலே!
கார்வரும் முன்னே மழைவந்தே உன்னுடன்
ஊடல் புரிகிறது! அந்த மழைப்பொழிவைப்
பாடிவந்த கார்காலம் என்றெண்ணிக் கொன்றைப்பூ
சூடி மகிழ மலர்ந்திருக்கும் கோலமிது!
தேடிவரும் அப்பருவம் இஃ தில்லை! தேன்மகளே!
நாடி வருவார்! பொறு.
விரைந்தே வருவார்!
பாடல் 67
பாடலாசிரியர்:
அள்ளூர் நன்முல்லையார்
தோழியின் ஆறுதல்
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.
---------------------------------------------------------------
கிளியலகில் கவ்வியுள்ள வேப்பம் பழம்போல்
தளிர்க்கை கூர்நகமோ பொற்காசில் பொற்கொல்லன்
தெளிவாக நூல்கோர்க்கப் பிடித்திருக்கும் காட்சி,
அளிக்கின்ற கள்ளிக்காட் டிற்குள்ளே செல்லும்
வழியெல்லாம் உன்னையே சிந்தித் திருப்பார்,!
தலைவியே! வந்திடுவார்! இங்கு.
-----------------------------------------------------------------
பாடல் 68
வருவாரா? மருந்து தருவாரா?
பாடலாசிரியர்
அள்ளூர் நன்முல்லையார்
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.
----------------------------------------------------------------
தோழி! குறும்பூழ்க்கால் என்னும் பறவையின்
தாள்போல் இருக்கும் உழுந்தின் முதிர்ந்தகாயை
ஆர்வமுடன் மான்கூட்டம் நின்றே கவர்ந்திருக்கும்!
பார்த்தாயா! முன்பனிக் காலம் இதுவன்றோ!
சேயிழையென் துன்பத்தைத் தீர்க்கும் மருந்திங்கே
பூவிதழாள் நாயகன் ஒன்றியஎன் மார்பாகும்!
பூரிக்க வைத்தஎன் நாயகன் மீண்டுவந்தே
வாரி அணைப்பதே நோய்தீர்க்கும் மாமருந்தாம்!
ஈவிரக்கம் கொள்வாரோ வந்து?
அன்பின் துடிப்பு!
பாடல் 69
பாடலாசிரியர் :
கடுந்தோட் கரவீரனார்
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
----------------------------------------------------------------
நாயகனே! நீங்கள் இரவில் வரவேண்டாம்!
ஆண்குரங்கு கண்ணில் கரும்புள்ளி வந்ததால்
தான்நாடும் மந்தியிடம் தாவி இரவிலே
ஆண்குரங்கு வீழ்ந்தே இறந்ததாம்! மந்தியோ
ஆணைப் பிரிய மனமின்றி் மந்தியோ
தானேந்தும் தாவ பயிற்சியற்ற குட்டியை
தான்சார்ந்த நல்ல உறவிடத்தில் ஒப்படைத்துப்
பாறையில் தானேறி வீழ்ந்தே இறந்ததாம்!
கானகக் காட்சிகொண்ட நாட்டுத் தலைவனே!
கானகத்தில் நீவந்தே ஆபத்தில் சிக்கிவிட்டால்
தேனகத்தாள் வாடி நொறுங்கிடுவாள்! நீஇரவில்
நாடி வரவேண்டாம் கேள்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home