குறுந்தொகை 70-75
குறுந்தொகை 70-75
பாடல் 70
கூடலின் வியப்பு
பாடலாசிரியர்:ஓரம் போகியார்
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.
-------------------------------------------+-----------++
தலைவியுடன் ஒன்றிய இன்பத்தை எண்ணி
நிலைமறந்தான் அந்தத் தலைவன்! மலைத்தான்!
தலைவியோ இப்படிப் பட்டவள் என்றும்
உரைக்க இயலவில்லை!அந்த நிலையில்
விளைந்திடும் சொற்கள் சிலவாகும்! மேனி
குலவும் பொழுதிலே பஞ்சணை போல
தளர்ந்தேதான் மெல்லியல் ஆகின்றாள்! கூந்தல்
நிலையில் படிந்திருக்க ஆரணங்கின் நெற்றி
நிலவொளிபோல் மின்ன வருத்துகின்றாள் என்னை!
மயக்கப் பிடியிலே நான்.
பயணத்தைத் தள்ளிவைத்தேன்!
பாடல் 71
பாடலாசிரியர்
கருவூர் ஓதஞானியார்
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
--------------------------------------------------------
அழகிய மங்கையாம்! மென்மையான மார்பு
இளமை ததும்பும் நிலையில் அரும்ப
மயக்கும் பரந்த கவர்ச்சிமிகு தோள்கள்
தவழும் இடையோ மெலிந்த எழிலில்!
இவளது கவின்மிகு தோற்றம்
என்னுள்
வளர்கின்ற ஏக்கத்தைத் தீர்க்கும் மருந்தே!
சுழல்கின்ற வைப்பு நிதியும் இவளே!
தவமிருந்து கானவர் பெற்ற
மகளாம்!
அழகுக் கடலில் கலப்பதை எண்ணி
பயணத்தை ரத்துசெய்தேன் நான்.
சோர்வின் பிடியில்
பாடல் 72
பாடலாசிரியர்:மள்ளனார்
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
-------------------------------------------------------------
தலைவனே! முகம் வாடித் தெரிகிறதே! ஏனோ?
தலைவனைக் கேட்டான் உரிமையுடன் பாங்கன்!
தலைவனோ பாங்கனிடம் கூறுவதைக் கேள்:
கலையரசி கண்களோ பூக்கள்தான்! ஆனால்
சிலைமாது என்மீது பாய்ச்சினாள் அம்பாய்!
நிலைகுலைந்தேன் மேனி வலித்ததால்! தோள்கள்
அலைபோல் திரண்டு உருண்டிருக்கும் கோலம்!
மலைமண்ணைத் தோண்டி விதைத்த தினையைக்
கவரவந்த சின்னக் குருவிகளை ஓட்டித்
துரத்தி இருந்தாள்! எனக்கவள்தான் நோயாம்!
மயக்கத்தில் சோர்ந்தேன் தவித்து.
தோழியின் செயல்!
பாடல் 73
பாடலாசிரியர்:பரணர்
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.
-----------------------------------------------------+-------
தலைவியைக் காண இரவிலே வந்த
தலைவனைப் பார்த்துப் பகலிலே வாராய்!
நிலைசொன்ன சூழலை நம்பி பகலில்
தலைவியைக் காணவந்தால் தோழி இரவில்
தலைவனை வந்துகாணச் சொன்னாள்! இஃது
தலைவியை ஏற்பதற்குத் தோழியின் சூழ்ச்சி!
இலக்கிய நன்னனைக் கோசர் துணையால்
கொலைசெய்த சூழ்ச்சிபோ லாம்.
விருப்பச் சிறகுகள்
பாடல் 74
பாடலாசிரியர்:விட்டகுதிரையார்
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே.
--------------------------------------------------------------
நானோ அவனை விரும்புகிறேன்! ஊராரோ
வேனில் பருவத்தில் காளை, பசுமாட்டை
ஊனுடன் இங்கே உரசுதல்போல் என்னழகை
நாடி வருகின்றான்என்கின்றார்! என்சொல்ல?
ஓடும்! குதிரை கழற்றிவிட்டால்! அஃதேபோல்
நீடுநிற்கும் மூங்கிலை இங்கே வளைத்துவிட்டால்
வான்நோக்கிப் பாய்கின்ற கோலத்தைக் கொண்டநாடு
பாமகனின் நாடன்றோ கூறு.
பாடல் 75
பாடலாசிரியர்:
படுமரத்து மோசிகீரனார்
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தௌிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.
--------------------------------------------------------------
பாணனே! என்னவரைக் கண்டாயோ? கண்டதாக
கானகத்தில் யாரேனும் சொன்னாரோ? யார்சொன்னார்?
மான்விழியாள் நானே தெளிவுபெற கேட்கின்றேன்!
நானேங்கும் அன்பர் வருவதோ உண்மையென்றால்
நானுனக்கு வெண்தந்த யானையோ சோணையாற்றில்
தான்குளிக்கும் பொன்னகராம் பாடலியைத் தந்திடுவேன்!
தேன்மாரி் செய்தி இது.

0 Comments:
Post a Comment
<< Home