Sunday, March 29, 2026

குறுந்தொகை 76-85

 குறுந்தொகை 76-85

பாடல் 76

முன்பனித் துன்பம்


பாடலாசிரியர்:

கிள்ளி மங்கலங்கிழார்.


காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்

செல்ப என்பவோ கல்வரை மார்பர்

சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை

பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்

தண்வரல் வாடை தூக்கும்

கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே.

------------------------------------------------------------------------------------------

உள்ளமோ கல்மலை ஆகிவிட்ட என்னவர்

கற்பாறை சுற்றியே காந்தள் மலர்ச்சரம்

பல்மலர்   வேலியாய் உள்ள மலைவழியில்

செல்வேன்  என்றேதான் சொல்லத் துணிந்தாரோ?

அல்லாடும் சேம்பிலை யானைக்கா தாடுதல்போல்

கொல்லும் வடக்கிருந்து வீசும் குளிர்க்காற்றாம்

சில்லென்ற அற்சிரக் காலத்தில் துன்பத்தில்

சொல்ல முடியாமல் நாம்நடுங்கு வோமென்றே

சொல்லி அனுப்பென்றாள் மாது.


பாடல் 77

 

தோள்கள் ஏங்கித் தவிக்கும்!

 

பாடலாசிரியர்

மதுரை மருதன் இளநாகனார்

 

அம்ம வாழி தோழி யாவதும்

தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து

உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை

நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்

அரிய கானஞ் சென்றோர்க்கு

எளிய வாகிய தடமென் தோளே.

 -----------------------------------------------------------------

எளிதில் கடக்க முடியாத காட்டில்

வழிப்போக்கர் செத்தால் உடல்களை மூடும்

தழைகள் குவியலாகத் தோன்றும்! உயர்ந்தே

உலவுகின்ற யானைகள் தங்குகின்ற வண்ணம்

நிழலாய்ப் பயன்படும் அப்பொருள் என்பார்!

 சுரவழி அத்தகைய அச்சமேந்தும்! அந்த

வழியே அவர்செல்லும் பாதையாம் தோழி!

தவிக்குமென் தோள்கள் மெலிந்தன! தப்பா?

தவறல்ல! தோழியே! சாற்று.



சங்கம உணர்ச்சி!


பாடல் 78


பாடலாசிரியர்:நக்கீரனார்


பெருவரை மிசையது நெடுவெள் ளருவி

முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்

சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப

நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென உணரார் மாட்டும்

சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே

----------------------------------------------------------------------------------------------

பண்பாடும் வெள்ளருவி மாமலையில் தோன்றினாலும்

அங்கேயே நில்லாது பக்கத்துக் கல்மலையில்

கண்கவர வீழ்கின்ற காட்சிகொண்ட நாட்டுக்குப்

பண்பான அன்புத் தலைவனே!

வாழ்விலே

இன்ப நுகர்ச்சி உணர்வு நன்றென்றே

இங்கே உணராத நெஞ்சிலும்

தங்கிவாழும்!

அன்பாய் வரவேற்கா தோரிடத்தில் தங்குவதோ

என்றும் அறியாமை!

இங்கே அறியாதோர்

பண்ணும் பிழைபொறுத்தல்

பண்புதான்! துன்புறுத்தும்

இந்நிலையை எண்ணி

வருந்தவேண்டாம்  நீயிங்கே!

அன்பரிடம் பாங்கன் எடுத்துரைத்தான் தன்கருத்தை!

சங்கமத்தைத் தேடும் உணர்வு.



வேதனை தீருமா?

பாடல் 79

பாடலாசிரியர்:

குடவாயிற் கீரத்தனார்


கான யானை தோனயந் துண்ட

பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை

அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்

புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்

அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்

சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு

ஒல்லேம் என்ற தப்பற்குச்

சொல்லா தகறல் வல்லு வோரே

-------------------------------------------------------------------------------------------------------------

தோழியே! அவருக் கிணையாக நானில்லை?

ஈவிரக்க மின்றித்தான் சென்றதால் ஏங்குகிறேன்!

 ஓவியமாம் என்னவர் சிற்றூர்க்குள் சென்றாரோ!

யானையோ ஓமை மரத்தை உரித்தபின்

கானகத்தில் நிற்கும் உலர்ந்த மரக்கிளையில்

கால்பதித்துப் பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்

பாதையில் உள்ளதே சிற்றூர்! அதைக்கேட்டு

பேதையென்னை நெஞ்சில் நினைப்பாரோ?மாட்டாரோ?

வேதனை தீர்ப்பாரோ? சொல்.

இருமனப் பெண்ணின் சீற்றம்!


பாடல் 80


பாடலாசிரியர்:

ஔவையார்


கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்

பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி

யாமஃ தயர்கம் சேறும் தானஃது

அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்

நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி

முனையான் பெருநிரை போலக்

கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.

-------------------------------------------------------------------------------------

குவளைச் செடிகளைத் தள்ளிவரும் வெள்ளம்

அலையெனத் துள்ளிவரும் நீரில் அளைந்து

விளையாட போகின்றேன்! உங்கள் தலைவன்

விளையாட அங்கே வருவான்! தலைவி

எழினியைப் போல தனியாக வந்து

தலைவனோ என்னைத் தழுவாத வண்ணம்

இயன்றால் தலைவனின் மார்பையும் உற்றார்

பலரையும் காப்பாற்றிக் கொள்ளட்டும்! சொல்க!

தலைவியைக் காப்பாற்றச் சொல்.



வருக திருமணம் புரிக!


பாடல் 81


பாடலாசிரியர்:

வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்


இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்

பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்

புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்

உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்

நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்

கடலும் கானலுந் தோன்றும்

மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே.

-------------------------------------------------------------------------------------

தலைவனே! உன்சொல்லை நம்பிநான் சொன்னேன்!

தலைவியும் என்சொல்லை நம்பியே வந்தாள்!

கிளைகொண்ட ஞாழல்  மரத்தடியில் தன்னை

இழந்தாள் உனக்கே! அதையெண்ணி நாளும்

புலம்புகிறாள்! அந்தோ எங்களூர்! பாராய்!

நிலவும் இருளும்போல் ஊரிருக்கும் கானல்

அலைகடல் நன்கு தெரிகிறது! தென்னை

மரங்களின் ஊடே இருக்கிறது ஊர்தான்!

வருக மறவாமல்! அங்கே தலைவி

கரம்பற்றி வாழ்வைத் தருக! கலங்கும்

தலைவியை ஏற்கவேண்டும் வந்து.


அவரன்றி யார்?


பாடல் 82


பாடலாசிரியர்:

கடுவன் மள்ளனார்


வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு

அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்

யாரா குவர்கொல் தோழி சாரற்

பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி அவரை பூக்கும்

அரும்பனி அச்சிரம் வாரா தோரே.

----------------------------------------------------

மலைச்சாரல் தன்னில் குறவன் தினையை

அலைந்தேதான் கொய்தபின்னர் அங்கே

அழகாய்ப்  படரும் அவரைப்பூ பூத்த

நிலையில் தலைவன் உரைத்தகாலந் தன்னில்

வரவில்லை என்றேங்கி வாரி முடிக்க

இயலாத கூந்தல் விரிந்திருக்க கண்ணீர்

கலங்கவைத்துப் பார்க்கின்ற கோலத்தைக் கண்டே

அழாதே எனக்கூறிக் கண்துடைக்க வல்லார்

அவரன்றி யாருளார்? கூறு.

அமிழ்தமே தரலாம்!


பாடல் 83

பாடலாசிரியர்:வெண்பூதனார்


அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்

பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை

தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்

தீம்பழந் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.

---------------------------------------------------------------

அன்புத் தலைவனோ வந்து தலைவியை

இங்கே மணமுடிக்க வந்திடுவான் என்றேதான்

பண்பாய்ச் செவிலித்தாய் சொன்னதும் தோழியோ

தன்வீட்டில் தன்முயற்சி கொண்டே உணவருந்தும்

இன்பத்தைக் கொண்டே திகழ்கின்ற  நாட்டினன்!

கண்முன் பலாப்பழம் தொங்குகின்ற நாட்டினன்!

அந்தத் தலைவன் வருவான் எனச்சொன்னாள்!

இன்சுவை நல்லமிழ்தை இந்த உலகுக்கே

தந்து மகிழலாம் சாற்று.



பாடல் 84


பருவமாற்றம்!


பாடலாசிரியர்:மோசிகீரனார்


பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்

இனியறிந் தேனது துனியா குதலே

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்

வேங்கையும் காந்தளும் நாறி

ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே.

---------------------------------------------------------------------------------------------------

மாவேளாய் வள்ளலோ தோள்வளை பூண்டிருப்பான்!

மாமலையில் வேங்கையுடன் காந்தள் மலர்மணக்க

மேகங்கள் ஆடும் பொதியமலை நாடனூர்! 

ஆம்பலை விஞ்சும் குளிர்ச்சியான என்மகளைக்

காண்கிறேன் என்னருகில் மங்கை படுத்திருந்தாள்!

தாய்ப்பாசம் பொங்க  இரவிலே தொட்டிழுத்தேன்!

மானோ, வியர்ப்பதாய்க் கூறித்தான் தாயென்னை

ஏனோ தவிர்த்தாள்! அந்தமனக் காரணத்தை

நானும் புரிந்துகொண்டேன்! தன்தலைவன் மட்டுமே

தேன்மகளைத் தொட்டுத் தழுவவேண்டும் என்றேதான்

தாயின் அணைப்பை வெறுக்கின்றாள்! நன்றுதான்!

சேயின் பருவமாற்றம் பார்



கரும்பிருக்க சக்கை எதற்கு?

 

பாடல் 85

பாடலாசிரியர்:

வடம வண்ணக்கன் தாமோதரனார்

 

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாண ரூரன் பாணன் வாயே.

--------------------------------------------------------------------

தலைவனைப் போற்றிவந்த பாணனிடம் தோழி

தலைவி மறுப்பதைக் கூறுகின்ற

கூற்று:

--------------------------------------------------------------------

தோழியே! நானோ கருசுமந்து வாழ்கிறேன்! 

ஈவிரக்க மன்றியே மேய்ந்துவரும் என்தலைவன்

பாவி வரவேண்டாம்! தோழியே! பாணனிடம் 

கூறிவிடு!  என்கின்றாள்! வாடிநிற்கும் மங்கை!

தோழியோ நான்சொன்னேன்! ஆனாலும் பாணனோ

சேல்விழியாள் உன்மீதோ தேன்மகன் தன்னுயிரை

வைத்தே துடிக்கின்றான்! கூறென்றான் சேயிழையே!

என்றுரைத்தாள் தோழியங்கு! கோபக் கனலுடன்

தோழியே! சூல்கொண்ட பெட்டைக் குருவிக்கு

ஆண்குருவி இங்கே கரும்பின்

சுவையற்ற

பூவால் இடம்செய்தே முட்டை இடச்செய்யும்!

ஈனில்லம் அதுவாம்! தலைவனின்

பண்புமதே!

தேன்சுவைச் செங்கரும்பாம் என்னை மறந்துவிட்டான்!

வீண்சுவைப் பூவாம் பரத்தையை நாடிவிட்டான்!

பாணனை சொல்லச்சொல் நீ.

 

 மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home