Thursday, June 14, 2007

வாழ்க்கை வெண்பா(நாள்-மலர்-காசு-பிறப்பு)

தொடக்கம் பிறப்பில்! தொடர்வது காசில்!
மடமட வென்றேதான் நாளும் -- கடமை
முடித்து கடைசிப் பயணத்தின் போது
மதித்தே பொழிவார் மலர்.

இதற்கா பரபரப்பு

பிறக்கும் பொழுதிலும் நிர்வாணம்!வாழ்வைக்
கடக்கும் சிறுபொழுதே ஆடை உடுப்போம்!
இறந்த பொழுதிலும் நிர்வாணக் கோலம்!
இதற்கா பரபரப்பு சொல்.

மதிப்பு

நாட்டுக்குள் குன்றில் விளக்காய் மதித்தாலும்
வீட்டுக்குள் நம்மைக் குடத்தில் விளக்காக
காட்சிப் பொருளாய் மதிக்கின்றார்! அம்மம்மா!
தேற்றுவார் யாரென்றே செப்பு.

உறவிழை குழந்தை

கடும்பகை எல்லாம் பனியாய் உருகி
இடந்தெரி யாமல் மறையும் -- குடும்பத்தைச்
சேர்ப்பது சேய்களின் மாசற்ற பாசந்தான்!
வாழ்வின் நடைமுறை நம்பு.