Wednesday, September 24, 2014

குழந்தை மனம் கொள்வோம்
----------------------------------------------------------
குழந்தைகள் கூடி விளையாடும் நேரம்
களமமைத்துப் போர்க்கோலம் கொண்டேதான் நிற்கும்!
குழந்தை உடனே பகைமறந்து மீண்டும்
விளையாடும் கூடிக் கலந்து.

 வேடதாரிக் கண்ணோட்டம்
----------------------------சாதனையை  வாழ்த்தி மகிழ்தலே பண்பாகும்!
சாதனையைச் செய்தவர் வேண்டியவர் என்றால்தான்
நாடதிர வாழ்த்திக் கொடிபிடிப்போம் என்றிருத்தல்
வேடதாரிக் கண்ணோட்டந் தான்.

தனிமை
----------------
அமைதி நிலையோ தனிமைக் கவிதை!
சுமையாய் இருந்தும் சுகமாய் இருக்கும்!
இமையாய் இருந்தும் இமைக்க மறுக்கும்!
சுமையே தனிமைத் துணை.

அலையும் கரையும்
--------------------------------------
கரையைத் தொடாமல் விடமாட்டேன் என்றே
அலைகள் பிடிவாதம் செய்ய---கரையோ
தொடவிட மாட்டேன் என்றேதான் நிற்க
அலைகரை மோதலைப் பார்.

ஆட்டுக்கல் மாவாக நாம்!
---------------------------------------------
நாட்டுக்கு நாடிங்கே வீட்டுக்கு வீடிங்கே
சேட்டைகள் செய்யும் குழந்தைகள் ஏராளம்!
ஆட்டுக்கல் மாவாய் அரைபட்டு நொந்தாலும்
சேட்டை குழந்தையின் சொத்து.

தமிழைத் தவிர்க்காதே
------------------------
மொழிகளைக் கற்பதில் தப்பில்லைஆனால்
மொழிகளைச் சொல்லித் தமிழை நாளும்
தவிக்கவிடும் போக்கைத் தமிழ்நாட்டில் செய்யும்
இழிகுணத்தை என்றும் தவிர்.

அன்றாட வாழ்க்கை
-----------------------------------------
கூட்டைவிட்டுக் காலைப் பொழுதிலே புள்ளினங்கள்
நாற்றிசை நோக்கிப் பறந்தே திரிந்துவிட்டுக்
கூட்டுக்குள் மாலைப் பொழுதில் திரும்புதல்போல்
நாட்டிலே மக்களின் வாழ்வு.

மதுவைத் தீண்டாதே!
-------------------------------------------
என்னென்ன சொன்னாலும் யாருமிங்கே கேட்பதில்லை!
சொன்னவரை இங்கே ஒதுக்கிவைத்துச் செல்கின்றார்!
நன்மைக்கே சொன்னாலும் நம்ப மறுக்கின்றார்!
என்று திருந்துவார்சொல்.





Tuesday, September 09, 2014

ஸ்கைப் வாழ்க்கை!
--------------------------------------
அப்பா ஒருநாட்டில்! அம்மா ஒருநாட்டில்!
எப்போதும் பிள்ளைகள் ஸ்கைப்பில்தான் பேசுவார்!
எப்போது பிள்ளைகள் தொட்டு மகிழ்ந்திடுவார்?
அப்பப்பா ஏக்கமே வாழ்வு!

சமுதாயப் பொறுப்புணர்வு
தேவை
---------------------------------------------------
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகள்
காட்சிகளைக் கொட்டுகின்ற கோலம்! திரைப்படங்கள்
நாட்டிலே  ஆபாசம் வன்முறை  இல்லாமல்
காட்சிகளைத் தந்தால் சிறப்பு.
இருப்பதில் இன்பம் கொள்!
----------------------------
இருக்கின்ற வாழ்க்கையை இன்பமாக மாற்றும்
ஒருநிலையை எடுத்துவிட்டால் நிம்மதி உண்டு!
இருப்பதையும் விட்டுவிட்டே ஏங்கினால் நாளும்
கருகிவிடும் நிம்மதிதான் காண்.

சமுதாயப் பொறுப்புணர்வு தேவை
--------------------------------------------------------------
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகள்
காட்சிகளைக் கொட்டுகின்ற கோலம்! திரைப்படங்கள்
நாட்டிலே  ஆபாசம் வன்முறை  இல்லாமல்
காட்சிகளைத் தந்தால் சிறப்பு.

அகந்தைக் குகை!
-------------------------------
நகைச்சுவை என்ற உணர்வை வாழ்வில்
பகைச்சுவையாய் எண்ணுகின்ற மாந்தரின் உ:ள்ளம்
அகந்தைக் குகையென்றே கூறலாம்! கண்ணே!
அகங்குளிர வாழ்வில் சிரி.


பிரான்சு கம்பன் கழகத்தின்
தலவர் பாரதிதாசன் அவர்களுக்குப்
    பொன்விழா வாழ்த்து
           18.10.2014
-----------------------------------------------------------------------------
மணிவிழா நாயகர் பல்லாண்டு வாழியவே!
-------------------------------------------------------------------------------------
செந்தமிழ்த் தாயின் சிறப்பான ஆசியுடன்
கம்பன் கழகத்தின் பாரதி தாசனார்
பொன்விழா காணுகின்றார்! வாழ்வாங்கு வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

நாடுவிட்டு நாடுசென்று நற்றமிழைப் பேணுகின்றார்!
ஏடு மணக்கின்ற பாவலராய் நல்லறத்தைப்
பாடுபொருள் ஆக்கிப் பண்பகமாய் அன்பகமாய்
நீடுவாழ வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.


   இன்று  உலக எழுத்தறிவு நாள்

                08.09.2014
------------------------------------------------------------------------
கற்பதை இங்கே தெளிவாகக் கற்றேதான்
கற்றதை வாழ்வில் கடைப்பிடிப்போம்--நற்றமிழே
இன்று உலக எழுத்தறிவு நாளாகும்!
நன்றியுடன் எண்ணி வணங்கு.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மகாகவி பாரதியார் நினைவு நாள்
    11.09.2014
--------------------------------------------------------------
முண்டாசு பாரதி மூச்சுக்கு மூச்சிங்கே
இந்தியாவை நேசித்தான்! இந்தியரை நேசித்தான்!
வந்தேறிக் கூட்டத்தைப் பாட்டாலே சாடினான்!
வண்டமிழால் எண்ணி வணங்கு.
இசையே உயிர்
------------------
பாடலின் சொற்கள் உயிரோட்டம் பெற்றேதான்
நாடறிய மக்களின் நாவில் அரங்கேறும்
தாகத்தை இங்கே இசைதான் கொணர்கிறது!
பாடல் உயிர்ப்பே இசை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தலையீடு!
--------------------------
வேடிக்கை பார்க்கும் நிலையெடுத்தால் நிம்மதிதான்!
ஓடிஓடி மூக்கை நுழைத்தால்
அவமதிப்பார்!
நாடிவந்து கேட்டால் அறிவுரை சொல்லலாம்!
தேடி அலைதல் இழிவு.

தனிமனித ஒழுக்கம்
-------------------------------------
பிள்ளைகள் பண்பகமாய் வாழ்வில் அமைந்துவிட்டால்
இல்லறத்தில் கற்பூர வாசனை தேடிவரும்!
தொல்லையாய் ஏறுமாறாய் மாறிவிட்டால் புல்பூண்டும்
எள்ளி நகையாடும் பார்.